குழந்தை வதை பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர், அமைச்சராக இருக்க தகுதியற்றவர் – அசலினா

நாடாளுமன்றம் | பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, அதிகரித்த வழக்குகள் தொடர்பில், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சை, பிரதமர் திணைக்களத்தின் முன்னாள் அமைச்சர் அசலினா ஓத்மான் கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாலியல் அத்துமீறல் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளை நிர்வகிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் சாட்சி அறைகளை உருவாக்குவது போன்ற ஒரு சிறப்பு அணுகுமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று அசலினா கூறினார்.

அத்துமீறல் அல்லது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றால், அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வயதில் அது குறித்து பேச வெட்கப்படுவார்கள் என்றார் அவர்.

“அதனால்தான், நாம் ஒரு சிறப்பு நீதிமன்றம், ஒரு சிறப்பு சாட்சி அறை, ஒரு சிறப்பு அணுகுமுறையை விரும்புகிறோம். இந்தக் குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டவர்கள்,” என்று இன்று மக்களவையில், 12-வது மலேசியத் திட்டம் (ஆர்.எம்.கே.-12) பற்றி விவாதிக்கும்போது அவர் கூறினார்.

டிசம்பர் 10-ம் தேதி, 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்குகள் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சிடம் அறிவிக்கப்பட்டது.

அதே அமைச்சு, 2020-இல் 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகளையும் பதிவு செய்தது. கோவிட் -19 பரவுவதைச் சமாளிக்க பிகேபி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டது.

குடும்ப வன்முறை வழக்குகளும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சர், ரீனா ஹருனின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் குடும்ப வன்முறை வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 4,905 ஆகும்.

குழந்தைகள் மத்தியிலான இப்பிரச்சினைக்குப் பொறுப்பான அமைச்சர், இதற்கு எவ்வாறு பொறுப்பேற்கப் போகிறார்?

“ஓர் அமைச்சராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள், (ஆனால்) உங்களால் இதைச் செய்ய முடியவில்லை. ஆக, நீங்கள் ஓர் அமைச்சராக இருக்க வேண்டியதில்லை.

“ஒரு நாட்டின் எதிர்காலம் குழந்தைகள்,” என்று அவர் கூறினார்.

வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் சூழ்நிலையை, வேலியே பயிரை மேய்ந்த கதை, என்ற அசலினா இந்தப் பிரச்சினையில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.