அக். 1 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கும் மலாக்காவும் 3-வது கட்டத்திற்கு நகர்கின்றன – பிஎம்

கிள்ளான் பள்ளத்தாக்கு – கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் – அக்டோபர் 1 முதல், 2-ஆம் கட்டத்தில் இருந்து 3-ஆம் கட்டத்திற்கு நகர, இன்று கூடிய தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு ஒப்புக்கொண்டது.

சிறப்பு குழுவின் தலைவரான பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், மலாக்கா 2-ஆம் கட்டத்திலிருந்து 3-வது கட்டத்திற்கும், கெடா 1-ஆம் கட்டத்திலிருந்து 2-வது கட்டத்திற்கு நகர்வதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“மலேசிய சுகாதார அமைச்சும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் தற்போதைய இடர் மதிப்பீட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு. இந்த மாற்றம் செய்யப்பட்டது.

“கெடா மாநிலம் 2-ஆம் கட்டத்திற்கு மாறும் நிலையில், நாட்டில் வேறு எந்த மாநிலமும் முதல் கட்டத்தில் இல்லை,” என்று அவர் கூறினார்.

தற்போது, கட்டம் 2-இல் கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

3-வது கட்டத்தில் கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், மலாக்கா, பெர்லிஸ், பஹாங், திரெங்கானு மற்றும் சரவாக் ஆகியவை உள்ளன.

நெகிரி செம்பிலானும் லாபுவானும் 4-வது கட்டத்தில் உள்ளன.