சமூக ஆர்வலர் ஃபஹ்மி ரேஸா மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டார், இந்த முறை மலேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் கேலிச்சித்திரம் தொடர்பாக கிளந்தான் காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இன்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது, கோத்த பாரு மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் இரஹீம் டாவோ இந்த விஷயத்தை உறுதி செய்தார்.
ஃபஹ்மியின் கேலிச்சித்திரம் குறித்த போலிஸ் புகார் அறிக்கை, பிப்ரவரி 20-ஆம் தேதி போலீஸாருக்குக் கிடைத்தது என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு சின்னம் மற்றும் பெயர் சட்டம் 1953, திருத்தம் 2016 பிரிவு 5 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், பிரிவு 233-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
“இது ஜாலூர் ஜெமிலாங் பற்றிய ஒரு கேலிச்சித்திரச் சமர்ப்பிப்புடன் தொடர்புடையது, புகார்தாரரின் கூற்றுப்படி கேலிச்சித்திரம் அவமதிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஃபாமி இன்று, தனது முகநூல் பதிவு ஒன்றில், கோத்த பாரு மாவட்டக் காவல் தலைமையகத்திலிருந்து (ஐபிடி) தன்னைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார்.
வழக்கம் போல், நாளை விசாரணைக்காக என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த ஆண்டு எனது கேலிச்சித்திரத்திற்காக #அக்தாசகிட்ஹத்தியின் (#AktaSakitHati) கீழ் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படுவது இது எட்டாவது முறையாகும்.
“இந்த வருடத்தில், நான் எனது குடும்பத்தைப் பார்க்கச் சென்றதைவிட, பல முறை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளேன்,” என்று அவர் கூறினார்.