கிசோனா மீது இனவெறி கருத்து தெரிவித்தவர் பெர்சத்துவிலிருந்து விலகல்

தேசியப் பூப்பந்து வீராங்கனை எஸ்.கிசோனாவுக்கு எதிராக இனவெறி கருத்துகளைப் பரப்பியவர் பெர்சத்து கட்சியில் இருந்து விலகினார்.

அதன் துணைத் தலைவர், அகமது ஃபைசல் அஸுமுவைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை அவர் உறுதிபடுத்தினார்.

“எனக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர் தனது இராஜினாமா கடிதத்தைப் பெர்சத்து பாசிர் பூத்தே பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

“அவர் பகிரங்க மன்னிப்பு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

அவர், கிளந்தான் பெர்சத்து, பாசிர் பூத்தே பகுதியின் உதவித் தலைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றிரவு பின்லாந்து, வந்தாவில், 2021 சுடிர்மான் கோப்பை பிரச்சார ஆட்டத்தில் விளையாடிய கிசோனாவுக்கு எதிராக இனவெறி கருத்துக்களைத் தெரிவித்த அவர் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

இந்த அறிக்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் அகமது ஃபைசலின் விமர்சனத்தையும் பெற்றது.

“நடந்தவற்றில் நான் ஏமாற்றமடைகிறேன், மலேசியக் குடும்பங்களின் நல்லிணக்கத்க்ச் சேதப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் அனைத்து குடிமக்களும் தலைவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று பெர்சத்து துணைத் தலைவரான அகமது ஃபைசல் கூறினார்.

மஇகா இளைஞர்கள் போலீசில் புகார்

இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, மஇகா இளைஞர்கள் இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்தனர்.

அதன் செயலாளர் ஆண்ட்ரூ டேவிட், அத்தகைய அறிக்கை மன்னிக்க முடியாதது என்றார்.

“வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி. இதுபோன்ற செயல்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கண்டிக்கிறோம்.

“அவரைப் போன்ற தனிநபர்களின் ஆரோக்கியமற்ற கருத்துக்களை அனைத்து மலேசியர்களும் நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.