மஇகா இன்னும் பிஎன்-உடன் உள்ளது – எம் சரவணன்

தேசிய முன்னணி (பிஎன்) கூட்டணியுடன் கட்சி இன்னும் உள்ளது என்று மஇகா துணைத் தலைவர் எம் சரவணன் கூறினார்.

அதே நேரத்தில், மஇகா அடித்தட்டு மக்களின் கருத்துகளையும் முடிவுகளையும் மதிக்கும் என்று மனித வள அமைச்சருமான அவர் கூறினார்.

“மஇகா, மசீச மற்றும் அம்னோ வெறும் அரசியல் கட்சிகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்று கட்சிகளும் ஒரு போராட்டம் ஆகும்.

கோலாலம்பூரில், நேற்று நடந்த மஇகா மத்தியச் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை, பிஎன் உடன் இருப்பது என்றுதான் முடிவு,” என்றார்.

முன்னதாக, பிஎன் இல்லாமல் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேண்டிய இடங்களின் விநியோகத்தை முடிக்க, தேசியக் கூட்டணி எடுத்த முடிவு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் தலைவர் முஹைதீன் யாசின், தேசியக் கூட்டணி தொகுதிகள் விநியோக பேச்சுவார்த்தைகளைத் தொடரும், அம்னோ அல்லது தேசிய முன்னணியிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த வாரம் தொடங்கி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

இதற்கிடையில், தனது கட்சியின் எதிர்காலம் குறித்து உயர்மட்ட தலைமை தனியாக எந்த முடிவையும் எடுக்காது என்றார் சரவணன்.

“நாங்கள் இன்னும் பிஎன் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும், பிஎன்-இன் இறுதி முடிவைத் தவிர, மஇகா தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

“தற்போது, ​​பிஎன் மட்டத்தில் (பிஎன் உடனான இருக்கை பேச்சுவார்த்தைகளில்) விவாதிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை.

“தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும், குறிப்பாக அடிமட்டத்திலிருந்து கருத்துக்களைக் கேட்க வேண்டும்.

“எனவே, நவம்பரில் வருடாந்திரப் பொதுக்கூட்டம் நடத்துவோம். அதன் பிறகு, அடிமட்ட மக்களின் கருத்துகளையும் பார்த்து முடிவெடுப்போம்,” என்று அவர் கூறினார்.