சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினரான, முன்னாள் மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் சுலைமான் அலி மற்றும் முழு மாநிலத் தலைமை மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக இன்று அறிவித்தார்.
“நான், இட்ரிஸ் ஹரோன், சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பங்காலான் பத்து, தெலுக் இமாஸ் மற்றும் பந்தாய் குண்டூர் ஆகியோருடன் சேர்ந்து, மலாக்கா முதல்வர் மற்றும் அவரது அரசாங்கத் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று அறிவிக்கிறோம்.
“நாங்கள் நான்கு பேரும் நம்பிக்கையில்லா கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளோம்,” என்று இன்று மலாக்காவில் செய்தியாளர் கூட்டத்தில் இட்ரிஸ் ஹரோன் கூறினார்.
அச்செய்தியாளர் சந்திப்பில், பங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசாம் ஹசான் பக்தீ, தெலுக் மாஸ் சட்டமன்ற உறுப்பினர் நூர் எஃபாண்டி அஹ்மத் மற்றும் பந்தாய் குண்டூர் சட்டமன்ற உறுப்பினர் நோர் அஸ்மான் ஹசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியையும் நாங்கள் இராஜினாமா செய்கிறோம். ஆக, அரசாங்கம் இனி இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
பதிவுக்காக, மார்ச் 2, 2020-இல், பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், மொஹமட் ரஃபிக் நைஸமோஹிதீன் (பாயா ரும்புட்) மற்றும் நூர் எஃபாண்டி அஹ்மத் (தெலுக் மாஸ்) கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, அட்லி ஜஹாரி தலைமையிலான மலாக்கா மாநில அரசு சரிந்தது என தேசிய முன்னணி அறிவித்தது.
அது தவிர, பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஜைலானி காமிஸ் (ரெம்பியா) மற்றும் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் நோரிஸாம் ஹசான் பக்தீ (பெங்காலான் பத்து) ஆகியோரும் பிஎச்-ஐ விட்டு விலகி, தேசியக் கூட்டணியில் இணைந்தனர்.
இது, பிஎச் கூட்டணியின் கீழ் 11 மக்கள் பிரதிநிதிகள், தேசியக் கூட்டணியின் கீழ் 17 பேர் என ஆனது.
அதைத் தொடர்ந்து, மார்ச் 9, 2020-இல், அம்னோ சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அலி (லெண்டு), புதிய மலாக்கா முதல்வராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, பிஎச் மலாக்காவில் மொத்தம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் – டிஏபியில் இருந்து ஏழு பேர், பிகேஆரில் இருந்து இரண்டு பேர், அமானாவில் இருந்து இரண்டு பேர் – உள்ளனர்.