மலாக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, ஜனநாயக செயல்முறையைத் தாமதப்படுத்த தற்போது எந்தக் காரணமும் இல்லை என்று அம்னோ உதவித் தலைவர் முகமது காலிட் நோர்டின் கருத்து தெரிவித்தார்.
மலாக்கா மாநிலச் சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என்ற அம்னோ தலைவரின் அழைப்பை ஆதரித்த காலிட், மக்கள் தங்களுக்கு யார் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும், சிறந்த வேட்பாளர் மலாக்காவை வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.
“மலாக்கா மாநிலச் சட்டசபையைக் கலைப்பதன் மூலம், இந்த நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்ற அம்னோ தலைவரின் அழைப்பை நான் ஆதரிக்கிறேன்.
நாடு முழுவதும் விரிவான தடுப்பூசி விகிதம், உடனடியாகத் தேர்தலை நடத்த ஏறக்குறைய அனுமதித்துள்ளது.
நேற்றைய தினம், முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், “மக்கள் ஆணை சில சுயநலப் போக்குக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் போது ஜனநாயக செயல்முறையைத் தாமதப்படுத்த எந்தக் காரணமும் இல்ல,” என்றார்.
முன்னதாக, மலாக்காவில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில முதல்வருக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மாநிலத்தின் நெருக்கடியைத் தீர்க்க மலாக்கா சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அஹ்மத் ஜாஹித்தின் கருத்துப்படி, மலாக்காவை வழிநடத்த, புதிய அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் ஆணையை மக்களிடம் திருப்பித் தர வேண்டும்.
அவர் தனது தலைமையிலான கட்சி, அரசாங்கத்தை இழப்பதில் ஆச்சரியமில்லை என்றார்.
இதற்கிடையில், மலாக்காவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, கட்சி தாவல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாட்டில் பதவி நீக்கல் தேர்தல் நடத்துவதற்கும் சட்டம் வகுக்கப்பட வேண்டியத் தேவையைக் காட்டுகிறது என்றும் காலிட் கூறினார்.