தேர்தல் : மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு தயாராக உள்ளது – நூர் ஹிஷாம்

மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற்றால், ஏற்படப்போகும் மோசமான சூழ்நிலைக்கு சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது.

“மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று மலேசியாகினியின் கேள்விக்குப் பதிலளித்த போது சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“சபாவில் நடந்ததைப் போல, அதிலிருந்து நாம் இன்னும் மீளாததால், இப்போதைக்குத் தேர்தல்கள் வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.”

முதல்வர் சுலைமான் அலி பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடைபெற வேண்டும்.

ஆய்வின் படி, சபா மாநிலத் தேர்தல் கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை உருவாக வழிவகுத்தது.

வாக்குப்பதிவு முடிந்த சில வாரங்களில், சுமார் 3,000 புதிய நேர்வுகள் தேர்தலின் காரணமாக ஏற்பட்டன.

மலாக்காவில் நிலைமை இன்னும் மோசமடையும் என்று கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, நூர் ஹிஷாம் கூறினார் :

“சபா தேர்தலின் போது, நாட்டில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை ​​இரட்டை இலக்கத்தில் இருந்தது.

“இப்போது, ​​மலாக்கா ஒவ்வொரு நாளும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்கிறது.”

இன்னும் துல்லியமாக, மலாக்கா கடந்த ஏழு நாட்களில் சராசரியாக 259 புதிய நேர்வுகளைப் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு, தொற்றுநோய் தாக்கியதில் இருந்து இதுவரை அம்மாநிலத்தில் மொத்தம் 59,610 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.