சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 – 17 வரையில், ‘வறுமை’ கருத்தரங்கு

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்து, மார்ஹேன் அணி (Gabungan Marhaen), மார்ஹேன் ஒன்றுகூடல் (Himpunan Marhaen) கருத்தரங்கு நிகழ்ச்சியை ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்துள்ளது. (மார்ஹேன்சாமானிய மக்கள் / ஓரங்கட்டப்பட்ட மக்கள் – விவசா யிகள், மீனவர்கள், உடல் உழைப்புத் தொழிலாளிகள்)

“இந்தத் தொற்றுநோய் காலத்தின் போது, சாமானிய மக்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்க ஒன்றிணைவதற்கான ஒரு தளமாக இது அமையும்.

“ஒரு வருடத்திற்கும் மேலாக, அடித்தட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த ஐந்து நாள் கருத்தரங்கு அந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த உள்ளது. அதே சமயம், மலேசிய அரசியல் தளத்தில் அவர்களையும் முக்கிய விளையாட்டாளர்களாகக் காட்டவுள்ளது,” என்று  ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

தேசிய அரசியலில், “இனம், மதம் மற்றும் அதிகாரப் பறிப்பு” ஆகியவற்றின் ஆதிக்கம், அடிமட்ட ஆர்வலர்களாலும் சமூகங்களாலும் எழுப்பப்படும் குரல்களையும் அவர்களின் பணிகளையும் பெரும்பாலும் மறைத்துவிடுகிறது என்று அருட்செல்வன் கூறினார்.

கலை பயிற்சியாளரும், நடுவருமான ரோஷீன் பாத்திமா, இந்த விழாவின் போது நடத்தப்படும் கருத்தரங்குகள், மலிவு விலை வீடுகள், ‘கிக்’ பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் உணவு பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற இன்னும் பல விஷயங்களை முன்னிலைப்படுத்தும் என்றார்.

2017-இல் உருவாக்கப்பட்ட மார்ஹேன் அணி, அடிமட்ட மக்கள், சமூகம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டணிகள், என ஒத்த கருத்துகொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அடிமட்ட சமூகங்களின் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் கூட்டணியாகும்.

இந்தக் கூட்டணி, அனைத்து மார்ஹேன் சமூகங்களையும், வேலைத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் இணைத்து, பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன் உறுப்பினர்களில், அரசு ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு (ஜேபிகேகே – Jaringan Pekerja Kontrak Kerajaan), பண்ணை தொழிலாளர்கள் ஆதரவு செயற்குழு (ஜே.எஸ்.எம்.எல். – Jawatankuasa Penyokong Pekerja Ladang), நகர முன்னோடிகள் மற்றும் வீடு கூட்டணி (ஜிபிபிபி – Gabungan Peneroka dan Perumahan Bandar), குறைந்த விலை அடுக்குமாடி வீடு செயற்குழு, விவசாயிகள் கூட்டணி, ஓராங் அஸ்லி / பூர்வக்குடி சமூகங்கள், சுற்றுச்சூழல் கூட்டணி மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் கூட்டணி ஆகியவை அடங்கும்.

இயங்கலை கூட்டங்கள்

செய்தியாளர் சந்திப்பில், அக்கூட்டணியினர் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019-ம் ஆண்டு முழுவதும், பல அடிமட்ட கூட்டமைப்புகளை நிறுவி செயல்பட்டதாகவும், அரசாங்கத்திற்குப் பல கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிப்ரவரி 2020-இல், கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கமும் ஷெரட்டன் நகர்வால் ஏற்பட்ட அரசியல் ஏமாற்றமும் அக்குழுவின் கோரிக்கை முயற்சிகளில் அரசாங்கத்தின் கவனத்தைக் கொண்டு வருவதைக் கடினமாக்கியது.

நாட்டைச் சீரழித்துள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மக்கள் மற்றும் அடிமட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க இது சரியான நேரம் என்று உணர்ந்ததாக அருட்செல்வன் கூறினார்.

‘மார்ஹேன் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி, அக்டோபர் 12 முதல் 17 வரை, ஒவ்வொரு நாளும், வெவ்வேறு கருப்பொருளுடன், இயங்கலை கருத்தரங்கு வடிவில் நடைபெறும்.

அக்டோபர் 4-ஆம் தேதி நிலவரப்படி, 160 தனிநபர்கள் இந்த ஒன்றுகூடல் விழாவில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

இயங்கலை கருத்தரங்கு ஒன்றுகூடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு @GabunganMarhaen முகநூல் பக்கத்தை நாடவும்.