கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகைத் தாக்கிவரும் கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில், சிலாங்கூர் 4.4 விழுக்காடு அல்லது 165,000 வேலையில்லாதவர்களைப் பதிவு செய்துள்ளது என்று மாநில இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் குழு தலைவர் முகமது கைருதீன் ஒத்மான் கூறினார்.
மாநில அரசு இந்த விகிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், ‘ஜெலாஜா சிலாங்கூர் பெகெர்ஜா 2021’ திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 25,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி இதனைக் குறைக்கலாம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
200 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வேலையின்மை விகிதம் 3.7 விழுக்காடாகக் குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
2019-இல் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாக இருந்தது, 2020-ஆம் ஆண்டில் உலகத்தைத் தொற்றிய தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 4.5 விழுக்காடாக அதிகரித்தது என்றார் அவர்.
‘ஜெலாஜா சிலாங்கூர் பெகெர்ஜா 2021’ திட்டம், இந்த ஆண்டு அக்டோபர் 23 முதல் டிசம்பர் வரை, ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோல குபு பாரு, உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய இடங்களுக்குப் பயணமாகும் என்று முகமது கைருதீன் ஒத்மான் கூறினார்.
“இந்தத் திட்டம் ஹைபிரிட் முறையில், அதாவது நேரலை மற்றும் நேரடி முறையில் நடத்தப்படுகிறது. மேலும், தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) 3-வது கட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.பி. நடைமுறைகளைப் புறக்கணிக்காமல் நடைபெறும்,” என்று அவர் இன்று ஷா ஆலாமில் தொடக்க விழாவில் கூறினார்.
சிலாங்கூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், www.selangorbekerja.com.my என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், மாநில அரசு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதலாளிகளுக்குத் தேவையான மனிதவளத்தைப் பெற உதவுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- பெர்னாமா