‘ஐபிசிஎம்சி தேங்காய் போன்றது, ஐபிசிசி அதன் நார் மட்டுமே’

இன்று நாடாளுமன்றத்தில், போலிஸ் நடத்தை மீதான சுயாதீன ஆணைக்குழுவுக்கு (ஐபிசிசி) எதிராக, சிவில் சமூகக் குழுக்களுடன் பல அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

இன்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தேசியக் கூட்டணி நிர்வாகத்தின் போது 2019 சுயாதீனப் போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) மாற்றி ஐபிசிசி – அதன் முன்னோடி ‘அமலாக்க முகமை ஒருமைப்பாடு ஆணைய’த்தை (ஈஏஐசி) விட பலவீனமானது என்றனர்.

“அமலாக்க முகமை ஒருமைப்பாட்டு ஆணையத்தை (ஈஏஐசி) விட ஐபிசிசிக்குக் குறைந்த அதிகாரமே உள்ளது.

“எனவே, அதன் செயல்திறனும் குறைவாகவே இருக்கும். ஆணையம் முன்மொழிந்த ஐபிசிஎம்சி ஒரு தேங்காய் என்றால், ஐபிசிசி அதன் நார் மட்டும்தான்,” என்று அவர்கள் கூறினர்.

உதாரணமாக, ஐபிசிசியின் கீழ் அமைக்கப்பட்ட பணிக்குழுவுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளன என்று அவர்கள் கூறினர்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஈஏஐசி-ஐப் போலல்லாமல், ஐபிசிசி-இன் கீழ் அத்தகைய அதிகாரம் இல்லை,” என்று அவர்கள் ஒரு மனுவில் கூறினர்.

அந்த மனு, பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) துணை அமைச்சர் மாஸ் எர்மியாத்தி சம்சுடினிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உள்துறை அமைச்சின் (கேடிஎன்) பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்டது.

ஐபிசிசியை நிராகரித்த அரசுசாரா இயக்கங்களில், எம்னெஸ்தி இண்டர்நேஷனல், ஆர்டிக்கல் 19, செண்டர் ஃபோர் இண்டிபேண்டன் ஜேனெலிசம் (சிஐஜே), சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) போன்றவையும் அடங்கும்.