யுஇசி அங்கீகாரம் : `புதிய காதலரிடம் கேளுங்கள்` – டோங் ஸோங்கிடம் மஸ்லீ

ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்கும் விவகாரத்தை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திடம் குறிப்பிடுமாறு, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், சீன அழுத்தக் குழுவான டோங் ஸோங்கைக் கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால், தான் தற்போது அரசாங்கத்தில் இல்லை, தவிர அந்தப் பிரச்சினைக்கு அவர் இனி பொறுப்பல்ல என்று மஸ்லி கூறினார்.

“டோங் ஸோங், உங்களால் இன்னும் என்னை மறக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

“ஜாவி பிரச்சினையில் நீங்கள் என்னை எப்படி நேசித்தீர்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது (ஆனால், நீங்கள் இப்போது அதற்கு சரி என்று சொல்வது போல் உள்ளது).

“அன்பே, தற்போது நான் அரசாங்கத்தில் இல்லை, தயவுசெய்து உங்கள் புதிய காதலரிடம் கேளுங்கள் … அவர் இப்போது பொறுப்பில் இருக்கிறார்,” என்று மஸ்லீ கீச் செய்துள்ளார்.

முன்பு அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு, யுஇசி-யை அங்கீகரிக்கும் ஓர் அறிக்கையை மலேசியக் கல்வி அமைச்சிற்குச் சமர்ப்பிக்க தவறியது ஏன் என்பதற்கு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய டோங் ஸோங் தலைவர், தான் தாய் கிம்-இன் அறிக்கைக்குச் சிம்பாங் ரெங்கம் எம்பியின் எதிர்வினை நகைச்சுவையாக இருந்தது.

“புதிய காதலன்” யார் என்பதை மஸ்லி தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சுவரொட்டியுடன் அவர் தனது கீச்சக செய்தியை இணைத்தார், முன்பு டோங் ஸோங்கைத் தடை செய்யுங்கள் எனப் பிஎச் அரசாங்கத்திற்கு இஸ்மாயில் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

ஷெரட்டன் நகர்வு வரை தாமதமானது

ஆகஸ்ட் 2019-இல், எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​பல அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் டோங் ஸோங்கை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுவதாகச் சத்தமாக விமர்சித்தனர்.

அந்த அமைப்பை விமர்சித்தவர்களில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இஸ்மாயில் சப்ரியும் ஒருவர்.

அந்நேரத்தில், தேசியத் தொடக்கப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்கள் – நான்கு பக்கங்கள் மட்டுமே – ஜாவி எழுத்தைக் கற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக டோங் ஸோங் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.

அம்னோ உதவித் தலைவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, அம்னோஆன்லைன், முஸ்லீம் மலாய்க்காரர்களின் கோபத்தைத் தூண்டிவிடும் வகையில் டோங் ஸோங் “சீனத் தீவிரவாதி” ஆக இருக்கக்கூடாது என்று இஸ்மாயில் சப்ரி எச்சரித்தார்.

டோங் ஸோங்கைத் தடை செய்யுமாறு, பிஎச் அரசுக்கு அந்த பெரா எம்பி சவால் விடுத்தார்.

14-வது ஜிஇ-க்குப் பிறகு அரசாங்கமாக மாறியபோது, ​​அக்டோபர் 2018-இல் யுஇசி கொள்கையை மறுபரிசீலனை செய்ய பிஎச் ஒரு பணிக்குழுவை அமைத்ததோடு, அதன் தேர்தல் அறிக்கையில் யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதாக உறுதியளித்தது.

அப்பணிக்குழு தனது அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், பல முறை தாமதமாகி, பிப்ரவரி 2020-இல் ஷெரெட்டன் நகர்வின் விளைவாக பிஎச் அரசாங்கம் சரிந்து போகும் வரை அதனைச் சமர்பிக்க முடியாமல் போனது.

ஜூலை 2020-இல் பணிக்குழு கல்வியமைச்சுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க சரியான நேரத்திற்காகக் காத்திருப்பதாகக் கூறியது.

அதன் தலைவர் எடின் கூ, ஆகஸ்ட் 2020-இல் அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

அக்டோபர் 2020-இல், கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி ஜிடின் கல்வியமைச்சு அந்த அறிக்கையைப் பெறவில்லை என்று கூறினார்.

மஸ்லீயின் அறிக்கை தொடர்பில், தானின் கருத்துக்களைப் பெற மலேசியாகினி முயற்சிக்கிறது.