இட்ரிஸ், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்வதில் ஏஎம்கே கெடா உடன்படவில்லை

கெடா பிகேஆர் இளைஞர் (ஏஎம்கே) தலைவர் முகமது ஃபிர்டாவுஸ் ஜோஹரி, முன்னாள் மலாக்கா முதல்வர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் இணைவதைத் தான் ஏற்கவில்லை என்று கூறினார்.

அவர்கள் நான்கு பேரும், மலாக்கா மாநில அரசைக் கவிழ்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர், மாநிலத் தேர்தல் நடைபெறுவதைக் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

“அங்காத்தான் முடா கெஅடிலான் கெடா நம்பிக்கையுடன் இருக்கிறது, இது மக்களின் குரல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் கருத்துக்களுக்கு இணங்க, அவர்களின் நுழைவை முழுமையாக ஏற்க முடியவில்லை,” என்று ஓர் அறிக்கையில் ஃபிர்டாவுஸ் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை பிகேஆர் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு, சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினரான இத்ரிஸ் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

அந்நிகழ்ச்சியின் போது, ​​அடுத்த மலாக்கா பிஆர்என்-இல் பிஎச் டிக்கெட்டின் கீழ் போட்டியிட இட்ரிஸ் ஆர்வம் காட்டினார்.

மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான, முன்னாள் டிஏபி உறுப்பினர் நோர்ஹிஸாம் ஹசான் பக்தீ (பெங்காலான் பத்து), தெலுக் மாஸ் சட்டமன்ற உறுப்பினர், நூர் எஃபாண்டி அஹ்மத் (பெர்சத்து) மற்றும் பந்தாய் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் ஹசான் (அம்னோ) ஆகியோர் அந்தந்தக் கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முந்தையப் பிஎச் தலைமையிலான மலாக்கா அரசாங்கத்தை வீழ்த்தியதில், நோர்ஹிஸாம் மற்றும் நூர் எஃபாண்டி ஆகியோரும் பங்கு வகித்தனர்.

நேற்று, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், மலாக்கா மாநிலத் தேர்தலில் பிஎச் வேட்பாளராக நோர்ஹிஸாம் பெயரிடப்படுவதை டிஏபி ஏற்கவில்லை என்றார்.

அதற்குப் பதிலளித்த நோர்ஹிஸாம், பிகேஆர் அல்லது அமானாவில் தான் சேருவதைத் தடுக்க டிஏபிக்கு உரிமை இல்லை என்றார்.

போராட்டக் கோட்பாடுகள் கடினமான காலங்களில் சோதிக்கப்பட்டு வருவதாகவும், அரசியல் மூலோபாயம் என்ற பெயரில் எந்த ஒரு நியாயமும் நடக்க அனுமதிக்கப்பட கூடாது என்றும் ஃபிர்டாவுஸ் கூறினார்.

“ஏனென்றால், இந்தக் கொள்கை ரீதியான போராட்டம் ஒரு நீண்ட பயணம், இந்த நீண்ட பயணமானது பொய், பாசாங்குத்தனம் மற்றும் பொறுமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

“கெஅடிலானின் கீழ் மட்ட மற்றும் நடுத்தரத் தலைமையின் குரல்களையும், தலைமை வழக்கம் போல் முழு ஆயத்தத்துடனும் திறந்த மனதுடனும் கேட்க வேண்டும்,” என்று ஃபிர்டாவுஸ் மேலும் கூறினார்.