`பிஎச் எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைக்கலாம்` – தியான் சுவா அழைப்பிற்கு லோக் எதிர்ப்பு

மலாக்கா பிஆர்என்-இல், “வெற்றியைத் தரக்கூடிய எந்தவொரு தரப்புடனும்” பிஎச் இணைந்து பணியாற்றலாம் என்ற பி.கே.ஆர். உதவித் தலைவரின் அழைப்பை டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் ஏற்கவில்லை.

“அது தியான் சுவாவின் தனிப்பட்ட கருத்து. டிஏபியின் நிலைப்பாடு பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“முன்னாள் முதல்வர் அட்லி ஜஹாரி தலைமையில் 22 மாதங்கள் மலாக்காவை ஆட்சி செய்தபோது, எங்கள் பொதுவான கொள்கை மற்றும் பதிவின் அடிப்படையில் பிஎச் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

“பிஎச் துரோகிகளை ஒதுக்க வேண்டும்,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

முதலமைச்சர் சுலைமான் அலிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்று, இந்த மாதத் தொடக்கத்தில் மாநில அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 4 சட்டமன்ற உறுப்பினர்களில், நோர்ஹிஷாம் பக்தீ மற்றும் நூர் எஃபெண்டி அஹ்மாட் இருவரும் அடங்குவர்.

2020-இல், பிஎச் அரசாங்க வீழ்ச்சிக்கும் இவர்கள் இருவரின் பங்கு இருந்தது.

நேற்று, 2018-ல் பெறப்பட்ட மக்களின் ஆணையை மீட்டெடுக்க அழைப்பு விடுப்பதாக தியான் சுவா கூறினார்.

“இது களத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு தந்திரம் (அதாவது) அதிக இடங்களை வெல்ல சிறந்த வழி எது என்று சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறப்படும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கூட்டணி அவசரப்படவில்லை என்று பிஎச் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார்.

“அவர்கள் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பத்தை அனுப்பவில்லை … எனவே, நாம் காத்திருக்க வேண்டும், நாங்கள் அவசரப்பட்டு செயல்பட விரும்பவில்லை. மேலும், நம்மைத் தொடர்பு கொள்ள அவர்களுக்கு நேரத்தையும் வாய்ப்பையும் கொடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு பிகேஆர் உதவித் தலைவரும் அவர்கள் பங்கேற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தார், அவர்களிடம் மோசமான பதிவு உள்ளது என்றும் கூறினார்.