மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து, பல மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்களில் (பி.கே.ஆர்.சி.), அக்டோபர் 11-இல் மாநில எல்லைகளைத் திறந்த பிறகு இந்நிலையைக் காணமுடிவதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
“மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதித்த பிறகு, இதேபோன்ற சூழ்நிலையைச் சரவாக்கில், குறிப்பாக வகை மூன்று, நான்கு மற்றும் ஐந்து நோயாளிகளில் காண முடிகிறது.
“இதேபோன்ற, நிலை தென் மண்டலத்தில் உள்ள பொது மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ளது,” என்று இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கைரி தெரிவித்தார்.
அதே நேரத்தில், சரவாக் மற்றும் கிளந்தானில் உள்ள தீவிரச் சிகிச்சைப் பிரிவுகள் (ஐசியு) மற்றும் ஐஐசியு அல்லாதவற்றிற்கான படுக்கை பயன்பாட்டின் அளவு இன்னும் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதாக கைரி கூறினார்.
பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களில், படுக்கை உபயோகத்தின் அளவு இன்னும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார்.
கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் போக்கு மிகவும் கவலைக்குரியது என்றும், கடுமையான வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் உண்மையில் விரும்புவதால் சுகாதார அமைச்சு மிகுந்த கவனம் செலுத்துகிறது என்றும் கைரி கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது, மாநில எல்லை கடந்த பயணத் தடையை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்றும் கைரி விளக்கினார்.