என்ஜிஓ : வாக்குறுதி அளிக்கப்பட்ட பாலின பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள் எங்கே?

சில அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) பணியிடத்தில் பாலின பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள் இல்லாமை குறித்தும், அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் முன்பு உறுதியளித்த பாலின பாகுபாடு சட்டங்கள் என்னவானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.

அது சட்டத்தை மீறாதது போல் காணப்படுவதால், மலேசியாவில் உள்ள முதலாளிகள் ஊழியர்களுக்கு எதிராக, தெளிவாக பாகுபாடு காட்டுவதைக் கண்டறிந்ததாக, மகளிர் உதவி அமைப்பின் (WAO) துணை நிர்வாக இயக்குநர் யூ ரென் சுங், நேற்று நடந்த விவாத அமர்வில் கூறினார்.

“உண்மை என்னவென்றால், பணியாளர்களில் பாகுபாடுகள் தடைசெய்யப்படவில்லை. எனவே, முதலாளிகளின் அப்பட்டமான, தொழில்நுட்ப ரீதியான பாகுபாடுகள் சட்டத்திற்கு எதிரானவை அல்ல. அதனால்தான் நாம் அதை எப்போதும் பார்க்கிறோம்.

“இது 2022 பட்ஜெட்டுக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இந்தச் சமீபத்திய பட்ஜெட் கொள்கையில், பாகுபாடு பற்றிய பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திடமிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்ததாகவும், தற்போதுள்ள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, வேலை தேடுபவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வர் நடுவராக இடம்பெற்ற, பாலினப் பதிலளிப்புக் கொள்கை குறித்த விரிவரங்கத்தில் இதை யூ கூறினார்.

முகநூலில் நேரலையில் நடத்தப்பட்ட அந்த விரிவரங்கத்தில், வறுமைக்குப் பங்களிக்கும் பல பரிமாண காரணிகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பெர்மாத்தாங் பாவ் பரிமாண வறுமை குறியீடு 2021-இன் தொடக்கமாக அந்த விரிவரங்கம் நடைபெற்றது.

விரிவரங்க கலந்துரையாடலில் மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார விரிவுரையாளர் பாத்திமா காரி, ஓய்வு பெற்றப் பிறகு பெண்களுக்குப் போதுமான ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்றார், காரணம் பாகுபாடு காரணமாக அவர்கள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர்.

இதற்கிடையில், 2022 பட்ஜெட்டில் மூன்று விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்று யூ கோரினார் :

  • பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்புக்கான முதலீடு
  • பணியிடத்தில் பெண்கள் (பாகுபாடு, தந்தையருக்கான மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை காப்பகம்)
  • மனநல நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டங்களை அதிகரிக்கும் முயற்சிகள்.

2020-இல் WAO ஆய்வின்படி, மலேசியாவில் 56 விழுக்காடு பெண்கள் பணியிடத்தில் பாலின பாகுபாட்டை அனுபவிக்கின்றனர்.

அவர்களின் ஆய்வு நேர்காணலின் போது, 47 விழுக்காடு பெண்கள் தங்கள் திருமண நிலை பற்றி கேட்கப்பட்டனர், அதே நேரத்தில் பதிலளித்தவர்களில் ஐந்து பேரில் ஒருவரிடம், பெண்ணாக, சில பணிகளைச் செய்யும் திறன் பற்றி கேட்கப்பட்டது.

மேலும், சுமார் 55 விழுக்காடு பெண்கள், தங்கள் கணவருக்கு ஒரு வாரத்திற்கும் குறைவாக விடுப்பு வழங்கப்பட்டதாகக் கூறினர், சிலருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. 55 விழுக்காடு பெண்கள் வழங்கப்பட்ட விடுப்பு போதுமானதாக இல்லை என்று கருதுகின்றனர்.

வேலைவாய்ப்பு சட்டத்தில் பின்வரும் ஐந்து திருத்தங்களை WAO முன்மொழிகிறது :

  • தனியார் துறை ஊழியர்களுக்கு ஏழு நாட்கள் தந்தைவழி விடுப்பு
  • தனியார் துறையில் 90 நாட்கள் ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு
  • தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்குப் பாலினம், இனம், மதம் மற்றும் மாற்றுத்திறனுக்கு எதிரான பாகுபாடு மீதான தடை
  • நெகிழ்வான வேலை நேரங்களைக் கோருவதற்கான உரிமை
  • பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு