`நோர்ஹிஸாமை வேட்பாளராகப் பெயரிட வேண்டாம்` – பிஎச் ஒப்புக் கொண்டது

பிஆர்என் மலாக்கா | அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), பக்கத்தான் ஹராப்பான் தங்கள் வேட்பாளர்களில் ஒருவராக நோர்ஹிஸாம் ஹசான் பக்தீயைப் பரிந்துரைக்க வேண்டாம் என்பதை ஒப்புக்கொண்டது.

பிஎச் தலைமை மன்றத்தின் கூற்றுப்படி, மலாக்கா மாநில அரசு வீழ்ச்சிக்குக் காரணமான நான்கு முன்னாள் மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, கூட்டணி தொடர்புடைய கட்சிகளிடமிருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டுள்ளது.

பிஎச், மக்கள் நலனை எந்தத் தனி நபருக்கும் மேலாக வைக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

சம்பந்தப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், தற்போது பிஎச்-இல் எந்தக் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாததால், அவர்கள் நடத்திய கூட்டங்களில் அவர்களின் வேட்புமனு குறித்து விவாதிக்கப்படவில்லை.

“எனினும், பிஎச் தலைமை மன்றம் மலாக்கா பிஆர்என்-இல் நோர்ஹிஸாம் ஹசான் பக்தீயை வேட்பாளராக்க முடியாது என்று முடிவு செய்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பி.கே.ஆர். மற்றும் பிஎச் தலைவரான அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமது சாபு, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கினபாலு அமைப்பு (அப்கோ) தலைவர் வில்பிரட் மேடியஸ் தங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மலாக்கா தேசிய முன்னணி- தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு, சம்பந்தப்பட்ட நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பொறுப்பாக இருந்தபோதிலும், சில பிஎச் தலைவர்கள் அவர்கள் நால்வரின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

நோர்ஹிஸாம் பிஎச் வேட்பாளராக மறுபெயரிடப்பட்டால் அதை ஏற்க முடியாது என்று டிஏபி உறுதியாகக் கூறியுள்ளது.

நோர்ஹிஸாம் முன்பு டிஏபி உறுப்பினராக இருந்தார், அதன் அடிப்படையில் பிஎச் அரசாங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தேசிய முன்னணி- தேசியக் கூட்டணி அரசாங்க அமைச்சரவையிலும் அவருக்கு இடம் வழங்கப்பட்டது.