லங்காவி தீவுக்குச் செல்ல விரும்பும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், நவம்பர் 15-ஆம் தேதி முதல் லங்காவி தீவு முன்னோடித் திட்டத்திற்கான சர்வதேச சுற்றுலா குமிழி மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
இன்று, கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சினால் (MOTAC) சமர்ப்பிக்கப்பட்ட எஸ்.ஓ.பி. நடைமுறைகளை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் கடைபிடிக்க வேண்டியதை ஒப்புக் கொண்டுள்ளது.
“18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர்கள்/பாதுகாவலர்களுடன் இருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் மலேசியக் குடிவரவுத் துறை, சுகாதார அமைக்சு மற்றும் வெளியுறவு அமைச்சுக்கு உட்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி, ஐந்து நாட்களுக்கு மேல் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஐந்தாவது நாளில் ஒரு திரையிடல் சோதனை செய்ய வேண்டும், அதற்கான அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிரதமரின் கூற்றுப்படி, ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் குறைந்தபட்சம் US $ 80,000 (RM320,000) காப்புறுதி திட்டத்தை வைத்திருக்க வேண்டும், MOTAC-இன் கீழ் உரிமம் பெற்ற பயணச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கடப்பிதழ் மற்றும் சுகாதார அறிவிப்பு மற்றும் இழப்பீட்டு விசாவை, புறப்படுவதற்கு முன் மைசெஜாத்திராவில் பதிவேற்றுவது மற்றும் பதிவு செய்தல் வேண்டும்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் விரைவான மூலக்கூறு சோதனைக்கு (rapid molecular test) உட்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், நேரடியாக லங்காவிக்குச் செல்வோர் இரண்டாவது நாளில் கோவிட் -19 ஆர்டி-பிசிஆர் சோதனைக்குக் கட்டாயம் உட்படுத்தப்பட வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி விளக்கினார்.
நேர்மறையானதாக இருந்தால், சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு, அவரவர் வகைக்கு ஏற்ப அழைத்துச் செல்லப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். ஒரு சுற்றுலாக் குழுவில் அதிகபட்சம் 20 பேருடன், ஒரு சுற்றுலா வழிகாட்டி இருக்க வேண்டும்.
சொந்த நாட்டிற்குப் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே, சுற்றுலாப் பயணிகள் ஆர்டி-பிசிஆர் கோவிட் -19 சோதணைக்கு உட்படுத்த வேண்டும். மூன்று நாட்கள் பயணம் செய்தால், இரண்டாவது நாளின் சோதனை முடிவுகளைப் பயன்படுத்தலாம்.
சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றம், சுற்றுலா குமிழியை மற்ற தீவுகள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய, லங்காவி தீவுக்கான சர்வதேச சுற்றுலா குமிழி முன்னோடி திட்டம் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
- பெர்னாமா