பிஆர்என் மலாக்கா : பிஎன் அனைத்து இடங்களிலும் போட்டியிடலாம்

நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), 28 மாநிலத் தொகுதிகளிலும் தனது கூட்டணி போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தேசியக் கூட்டணியின் (தே.கூ.) தலைவர் முஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

தீபகற்பத்தைத் தளமாகக் கொண்ட தே.கூ. கட்சி, அதாவது பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றால் இந்த விஷயம் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக, நேற்றி ஜொகூர், பாகோவில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அம்னோ தனது கட்சியுடனான ஒத்துழைப்பை நிராகரிக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், இரண்டு, மூன்று அல்லது நான்கு முனை போட்டியில் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் முஹைதீன் கூறினார்.

“இது எங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல,” என்று அவர் கூறினார்.

2018-ஆம் ஆண்டில், பெர்சத்து மலாக்காவில் ஆறு மாநிலத் தொகுதிகளில் போட்டியிட்டது, அதில் அவர்கள் பாயா ரும்புட் மற்றும் தெலோக் மாஸ் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இந்த இரண்டு இடங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் மலாய் அல்லாத வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க முனைகின்றனர்.

இதற்கிடையில், மாநிலத்தின் 28 இடங்களில், பாஸ் 24 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

செர்காம் மற்றும் அயேர் மோலெக் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் 20 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர்.

கெராக்கான் ஓர் இடத்தில் – பெங்காலன் பத்து – மட்டுமே போட்டியிட்டு டிஏபியிடம் தோல்வியடைந்தது.

பெர்சத்து மற்றும் பாஸ் இணைந்திருந்தாலும், இம்முறை பிஆர்என்-இல் தேசியக் கூட்டணி கடினமான சவால்களை எதிர்கொள்ளும் என்பதை ஆரம்ப பகுப்பாய்வு காட்டுகிறது.