புதியத் துணை சபாநாயகர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்றத்தின் புதியத் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலில் அது இன்றைய மாநாட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், கேள்வி பதில் அமர்வுக்குப் பிறகு ஒத்திவைப்புப் பிரேரணையைத் தாக்கல் செய்தார்.

ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் வாக்கெடுப்பு மூலம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிரதிநிதிகள் சபையின் புதியத் துணை சபாநாயகருக்கான தேர்தல், கடந்த மாதம் மக்களவை அமர்வின் போது ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது, ​​பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லான் மற்றும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் இருவரும் முறையே அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அப்பதவிக்கு முன்மொழியப்பட்டனர்.

முன்னதாக, பிரதிநிதிகள் சபையின் மூன்றாவது துணை சபாநாயகர் பதவிக்கான அரசியலமைப்பு திருத்தத்திற்காகத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது என்று அரசாங்கம் கூறியது.

இருப்பினும், அந்த நேரத்தில் பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்த அஹ்மத், வாக்களிப்பில் தோல்வியடைவார் என்று கருதப்பட்டது.

31 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பெர்சத்து, அகமதுவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அஹ்மத் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக கேமரன் மலை எம்பி ராம்லி முகமட் நோர் நியமிக்கப்பட்டார்.