மலாக்கா தேர்தல் ஒருபக்கச் சார்பானது – பெர்சே

பெர்சே 2.0, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், உடல் ரீதியான கூட்டங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கான முழுத் தடையை நிராகரித்தது.

அத்தகைய தடையானது, வேட்பாளர்களின் ‘பிரசார உரிமை மற்றும் வாக்காளர்கள் தகவலறிந்து, முடிவுகளை எடுப்பதற்கான உரிமை’ ஆகியவற்றை ஒடுக்குவதாக அது கூறியது.

உண்மையில், தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) 4-ஆம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள மலாக்காவில், பரிந்துரைக்கப்பட்ட எஸ்ஓபி-களுடன் இது பொருந்தவில்லை என்று அவர்கள் கூறினர்.

அந்தக் கட்டத்தில், 50 விழுக்காடு சமூக இடைவெளி திறனுடன் சமூகச் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன,

“சுகாதார அமைச்சரின் உத்தரவு, பிபிஎன் வழிகாட்டுதல்களுக்கு முரணானது, ஏனெனில் இது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அரசாங்க வேட்பாளர்களின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளையும் முன்னிலைப்படுத்தும் அரசாங்க ஊடகங்களின் போக்கைத் தொடர்ந்து, அரசு அல்லாத வேட்பாளர்களுக்கு இந்தத் தடை தீங்கு விளைவிப்பதாக பெர்சே மேலும் கூறியது.

“இது நிச்சயமாக போட்டியை ஒரு பக்கச்சார்பாக மாற்றுவதோடு, தேர்தல் முடிவுகளின் செல்லுபடியையும் குறைக்கும்,” என்று அது கூறியது.