பிரசராணா : உலு யாமில் புறக்கணிக்கப்பட்ட இரயில் பெட்டிகள் எங்களுடையது அல்ல

பிரசராணா மலேசியா பெர்ஹாட், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) இரயில் பெட்டிகள் தற்போது தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமானது அல்ல என்று கூறியுள்ளது.

“அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி வரிசையில், தற்போது பயன்படுத்தப்படும் 50 புதிய தொகுப்பு இரயில்களை வாங்குவதற்கான ‘திரும்ப வாங்கும் திட்டத்தின்’ (buy-back) ஒரு பகுதியாக, 2014-ஆம் ஆண்டில், அந்த இரயில்களின் தொகுப்பு சிஎஸ்ஆர்-ஜுஜோவுக்கு மாற்றப்பட்டது,” என்று பிரசரணா நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.

சிலாங்கூர், உலு யாமில், திறந்த பகுதியில் பல புறக்கணிக்கப்பட்ட இரயில் பெட்டிகள் கிடப்பதாகக் கூறப்படும் தொடர் வீடியோக்களுக்குப் பிறகு, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆறு வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டை நிறுத்திய அந்த இரயில் பெட்டிகள் ஏன் திறந்த நிலையில் அங்கு இருக்கின்றன என்று சில கேள்விகளுடன் விவாதங்களையும் தூண்டின.

பிரசரணாவின் கூற்றுப்படி, 2016-இல், அந்த இரயில் பெட்டிகள் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டதை சிஎஸ்ஆர்-ஜுஜோ உறுதிப்படுத்தியது. பின்னர் அவை, உலு யாமில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பகுதியில் வைக்கப்பட்டன.

“இது பிரசராணாவின் சொத்து அல்லது பொறுப்பு அல்ல என்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரயிலின் தற்போதைய உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1996-ஆம் ஆண்டில், அது செயல்படத் தொடங்கியதிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக அம்பாங் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி தடத்தில் அது பயன்படுத்தப்பட்டது.

2015-இல், சிஎஸ்ஆர்-ஜுஜோ எலக்ட்ரிக் லோகோமோதிவ் கோப் லிமிடட் நிறுவனத்திடமிருந்து, 990 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, ஆறு பெட்டிகள் கொண்ட 50 இரயில்களை பிரசராணா வாங்கியபோது அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது.