வருமானத்தை இழந்த 870,000 தொழிலாளர்களுக்கு RM500 உதவித் தொகை

வருமானத்தை இழந்த தொழிலாளர்களுக்கு, ஒருமுறை வழங்கப்படும் RM500 வருமான இழப்பு உதவி (பிகேபி) நாளை முதல் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வருமானத்தை இழந்த கிட்டத்தட்ட 870,000 தொழிலாளர்தம் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

“மலேசிய குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலக்கு குழுக்கள்.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, அக்டோபர் 26, 2021 செவ்வாய்க்கிழமை முதல் ‘ஒரே முறை’ அடிப்படையில், RM500 வருமான இழப்பு உதவி வழங்கப்படும்.

“இந்த உதவிகள் அனைத்தும் மலேசியக் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கோடு, RM434 மில்லியன் நிதியை உள்ளடக்கியது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

2021-ஆம் ஆண்டு முழுவதும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) அல்லது சொக்ஸோ தரவின் அடிப்படையில், வருமானத்தை இழந்த ஊழியர்களுக்குப் பி.கே.பி. வழங்கப்படுகிறது.

பி.கே.பி. ஒப்புதல் நிலையைச் சரிபார்க்க விரும்புவோர், நாளை முதல், https://bkp.hasil.gov.my என்ற பி.கே.பி. வலைதளம் மூலம் இதைச் செய்யலாம்.

“இந்த உதவி மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் பிற பண உதவிகள், இன்னும் சவாலான இந்தக் காலகட்டத்தில் மலேசியக் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறோம்,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.