12-வது எம்.பி. : குறைபாடுகள் குறித்து பி.எஸ்.எம். குறிப்பாணை சமர்பித்தது

இம்மாதத் தொடக்கத்தில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 12-வது மலேசியத் திட்டம் (12-எம்.பி.) தொடர்பான கருத்து மற்றும் விமர்சனங்கள் குறித்து, பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமதுவுக்கு மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) ஒரு குறிப்பாணையை அனுப்பியுள்ளது.

திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு முக்கியப் பிரச்சினைகளை மேலும் மேம்படுத்துவதற்கான கருத்துக்களை வழங்க அந்தக் குறிப்பாணை முயன்றுள்ளது.

“பிஎஸ்எம்-ஐ சேர்ந்த நாங்கள், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற B40 சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறோம்; தொழிலாளர் வர்க்கம் மற்றும் மார்ஹேன் (பாமர மக்கள்) பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 12எம்.பி.-இல் பற்றாக்குறை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்,” என்று அந்தக் கட்சி ஓர் அறிக்கையில் கூறியது.

நேற்று காலை, பிரதமர் அலுவலக வளாகத்தில், பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் ஆர் சிவராஜன்  வழங்கிய அக்குறிப்பாணையை, முஸ்தபாவின் தனிச் செயலாளர் முகமது இர்வான் மன்சோர் பெற்றுக்கொண்டார். உடன் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், பொருளாலார் சோ சொக் வா இருவரும் இருந்தனர்.

ஊழியர்களின் இழப்பீடு உட்பட 12எம்.பி.-இல் உள்ள பல சிக்கல்களை அந்த ஆவணம் எடுத்துக்காட்டியது; மலிவு விலை வீடுகள்; சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு; மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை அதில் பேசப்பட்டுள்ளன.

முன்னதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 12எம்.பி.-இன் ஒரு பகுதியாக, ஊழியர்களின் இழப்பீடு முந்தைய திட்டத்தில் பட்டியலிடப்பட்ட 37.2 விழுக்காட்டிற்குப் பதிலாக, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டைப் பங்களிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

B40 எதிர்கொள்ளும் வரம்புகள்

பிஎஸ்எம்-இன் கூற்றுப்படி, B40 சமூகத்தில் உள்ள ஊழியர்களிடையே வருமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 12எம்பி தவறிவிட்டது.

“பெரிய நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் (சி.இ.ஓ.), மூத்த மேலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் சம்பள உயர்வு B40 மற்றும் M40 (குழுக்கள்) ஊழியர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காமல் (ஒட்டுமொத்தமாக) பணியாளர் இழப்பீட்டை அதிகரிக்கலாம்.

“சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு பத்து ஊழியர்களுக்கும் நாம் பணியாளர் இழப்பீட்டை நிர்ணயம் செய்து கண்காணிக்க வேண்டும்,” என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

B40 சமூகம் எதிர்கொள்ளும் வரம்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பி.எஸ்.எ.ம். மேலும் கூறியது.

ஒரு டெசில் என்பது குடும்ப வருமான நிலைகளின் அடிப்படையில் 10 சம குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மக்கள்தொகையின் விநியோகமாகும்.

திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட “மலிவு விலை வீடுகள்” என்றச் சொல் குறித்து, ஒவ்வொரு டெசிலின் விருப்பத்தையும் வீட்டுவசதிக்குச் செலவிடும் திறனையும் கருத்தில் கொள்ள அரசாங்கம் தவறிவிட்டது என்று பி.எஸ்.எ.ம். கூறியது.

RM300,000-க்குக் கீழ் உள்ள வீடுகள் மலிவு விலையில் இருப்பதாக 12எம்பி-இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

“கேள்வி என்னவென்றால், முதல் டெசில் ஒரு குடும்பத்திற்குக் (மாதாந்திரக் குடும்ப வருமானம் RM3,000-க்கும் குறைவானது) கட்டுப்படியாகுமா?

“RM300,000 கடனுக்கு, 30 வருடங்கள் செலுத்தும் காலத்திற்கு, மாதந் தோறும் RM2,100 செலுத்த வேண்டும்,” என்று அது கூறியது.

மலேசியாவில், 50 விழுக்காடு குடும்பங்கள் மாதத்திற்கு RM 4,850-க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றன என்று பி.எஸ்.எ.ம். சுட்டிக்காட்டியுள்ளது.

“ஒவ்வொரு மாதமும் வங்கிக் கடன் தொகையாக RM 2,100 செலுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை,” என்று பி.எஸ்.எ.ம். கூறியது.

RM7,100-க்கு மேல் மாத வருமானம் உள்ள குடும்பங்கள் மட்டுமே RM300,000 விலையுள்ள வீட்டை வாங்க முடியும் என்று அந்தக் கட்சி கூறியது.

உண்மை அடிப்படையிலான சுற்றுச்சூழல் உத்திகள்

மலேசியாவில், குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் ஊதிய ஒடுக்குமுறை காரணமாக, மருத்துவத் துறையில் நிதிச்சுமை குறைக்கப்பட வேண்டும் எனும் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது கூறியது.

பசுமைக்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயு வெளியேற்றத்தின் தீவிரத்தில் 29.4 விழுக்காடு குறைப்பு, வீட்டுக் கழிவு மறுசுழற்சி விகிதம் 30.9 விழுக்காடு, காடுகளால் மூடப்பட்ட மலேசியாவின் நிலப்பரப்பு மற்றும் 2015 மற்றும் 2020-க்கு இடையில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் 12எம்பி-இல் பட்டியலிடப்பட்ட புள்ளிவிவரங்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் முறைகள் குறித்தும் பி.எஸ்.எ.ம். தெளிவுபடுத்தியது.

“பசுமைக்குடில் வாயு உமிழ்வு காரணமாகப் புவி வெப்பமடைதல் அச்சுறுத்தலை நாம் கையாள விரும்பினால், பயனுள்ள மற்றும் உண்மை அடிப்படையிலான உத்திகளை நாம் வகுக்க வேண்டும்.

உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களைக் கொண்ட ‘கிரீன்வாஷிங்‘ கூறுகளைப் புகாரளிப்பதை நாடுகள் தவிர்க்க வேண்டும்,” என்று அது கூறியது.

ஒவ்வொரு துறையிலும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை உண்மையான புள்ளிவிவரங்களுக்குக் கண்காணிக்க கல்வியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் ஒரு தொழில்நுட்பக் குழுவை நிறுவ பி.எஸ்.எ.ம்.  பரிந்துரைத்தது.

“காலநிலை மாற்றத்தைத் திறம்பட எதிர்கொள்ள, எங்களுக்குச் சரியான தரவு தேவை,” என்று அது மேலும் கூறியது.