பி.ஆர்.என். மலாக்கா : பெர்சத்துவும் பாஸ்-உம் தே.கூ. சின்னத்தில் போட்டியிடும்

பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகள், மலாக்கா மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) தேசியக் கூட்டணி (தே.கூ.) சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக அந்தக் கூட்டணியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தே.கூ. தலைமை மன்றம் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

“பெர்சத்து, பாஸ், ஸ்டார் சபா, எஸ்ஏபிபி மற்றும் கெராக்கான் ஆகிய அனைத்துக் கூறு கட்சிகளும் கலந்துகொண்ட அச்சிறப்புக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

“பி.ஆர்.என். மலாக்கா தொடர்பான விஷயங்களைப் பற்றி ஆலோசிக்கவே இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகள் மலாக்கா மாநிலத் தேர்தலில் வேட்பாளர்களை வழங்குவதற்கும், தே.கூ. சின்னமாக ஒரு சின்னத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளன,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முஹைதினின் கூற்றுப்படி, தே.கூ. கட்சி போட்டியிடும் இடங்களின் பேச்சுவார்த்தை தே.கூ. தொகுதி பேச்சுவார்த்தைக் குழுவால் இறுதி செய்யப்படும்.

தே.கூ. தலைமை மன்றம், அனைத்து கூறு கட்சிகளையும் அந்தந்தத் தேர்தல் எந்திரங்களை அணிதிரட்ட முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற மலாக்கா மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தங்களின் முழு ஆற்றலையும் முயற்சிகளையும் திரட்டுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

முதல்வர் சுலைமான் அலிக்கு அளித்த ஆதரவை நான்கு அரசாங்கப் பிரதிநிதிகள் திரும்பப் பெற்றதை அடுத்து, அக்டோபர் 4-ஆம் தேதி மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது.