‘விவாதமின்றி’ பணியக நியமனம் – பிகேஆர் மாணவர் பிரிவு வருத்தம்

அவர்களிடம் கலந்துபேசாமல், மாணவர் பணியகத்திற்கான தலைவர்களை நியமித்த கட்சியின் இளைஞரணித் தலைவரின் செய்கையால் பிகேஆர் மாணவர் பிரிவு ஏமாற்றமடைந்தது.

பிகேஆர் இளைஞரணித் தலைவர் அக்மல் நசீரின் செயலால் வருத்தம் அடைந்ததாக, பிகேஆர் மலேசியா மாணவர் மையத் தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்மலின் நடவடிக்கை பொருத்தமற்றது, ஏனெனில் நியமனம் செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் மத்தியில் இல்லாதவர்கள், அதுமட்டுமின்றி அவர்கள் படிப்பை முடித்தவர்கள் என அது கூறியது.

“இளைஞரணித் தலைவர் மாணவர்களின் முயற்சியைப் பாராட்டாமல், விவாதம் இன்றி நியமனம் செய்கிறார் என்பதை இந்தச் செயல் தெளிவாகக் காட்டுகிறது.

“ஏ.எம்.கே. தலைவர் மாணவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, கடமைக்காக சில சந்திப்புகளை மட்டுமே செய்கிறார் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்த நியமனம் ஒரு கவனக்குறைவான நியமனம் என்றும், பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் பிகேஆர் மாணவர்களுடன் எந்த விவாதமும் இல்லாததால் அது பணியகத்தில் உள்ள காலியிடத்தை நிரப்புவதற்கு மட்டுமே என்றும் நாங்கள் கருதுகிறோம்.

“ஏ.எம்.கே.-இன் தலைவர் என்ற முறையில், அவர் ஒருமித்த கருத்துடன் இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டும் மற்றும் ஒரு புரிந்துணர்வை எட்ட வேண்டும். அதே போல், மாணவர் பணியகத்திற்கும் மலேசிய பிகேஆர் மாணவர்களுக்கும் இடையிலான பதட்டங்களைத் தவிர்க்க வேண்டும்,” என்று அது கூறியது.

பிகேஆர் இளைஞர் பிரிவு, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையே மாணவர் பணியகத்தை மீண்டும் நிறுவுகிறது என்று அக்மல் நேற்று அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்கையில் அது இவ்வாறு சொன்னது.

இந்த அறிவிப்புக்கு இணங்க, ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மால், மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முஹம்மது ஹாசிக் அஸ்பர் இஷாக்கைப் புதிதாக மீண்டும் நிறுவப்பட்ட பணியகத்தின் தலைவராகவும் அறிவித்தார். ஹாசிக் செப்டம்பர் 16-ம் தேதி பிகேஆரில் இணைந்தார்.

இதற்கிடையில், முன்னாள் மாணவர் தலைவர்களான தான் ரேய் மிங், இர்ஃபான் மஹ்ஜான், அகிலா ஜௌனுஸி, சியூ யி சுவேன், மற்றும் ஸுக்ருல் காயிர் ஆகியோர் பணியக உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.

“பிகேஆர் இலைஞர் தலைவர் என்ற முறையில், இதுபோன்ற ஒரு தளம் இருப்பது இளைஞர் பிரிவின் வலிமையை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும், மேலும் மாணவர்களிடையே பிகேஆருக்கு ஆதரவை அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.