நாடாளுமன்றம் | மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) போட்டியிடும் கட்சிகளுக்குச் சமமான ஊடக அணுகலை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நிக் நஸ்மி நிக் அஹ்மட் (பிஎச்-செத்தியவங்சா), மலாக்காவில் நேற்று தொடங்கிய நேருக்கு நேர் பிரச்சாரங்கள் மற்றும் சந்திப்புகளைத் தடை செய்வதற்கான புத்ராஜெயாவின் முடிவைக் கருத்தில் கொண்டு, அவர் இவ்வாறு கூறினார்.
“மலாக்கா பிஆர்என்-இல் வேட்பாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்க முடியாது.
“சிங்கப்பூர் தேர்தலின் போது நடந்ததைப் போல, தொலைக்காட்சி, வானொலி போன்ற சமூக ஊடகங்களில், போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான அனுமதி வழங்க அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
“தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆகியவற்றிற்குச் சமமாகப் பகிரவும்,” என்று அவர் கூறினார்.
நேற்று, ஏழு அவசரச் சட்டங்களை இரத்து செய்யும் பிரேரணை மீதான விவாதத்தில் நிக் நஸ்மி பேசினார்.
இருப்பினும், பொது ஒளிபரப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா, தனது நிறைவு உரையின் போது நிக் நஸ்மியின் ஆலோசனைக்குப் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, மலாக்கா தேர்தல் பிரச்சாரத்திற்கான புத்ராஜெயாவின் விதிகள், குறைந்தபட்சம் வேட்பாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்கவோ, வீடு வீடாகச் சென்று அல்லது சிறிய கூட்டங்களை நடத்தவோ அனுமதிக்க வேண்டும் என்று நிக் நஸ்மி கூறினார்.