பாதிக்கப்பட்ட பிறருக்கு ஆதரவை வழங்கவும், பேச ஊக்குவிக்கவும், தனது முன்னாள் பயிற்சியாளர் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தலின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாக தேசிய மூழ்காளர் பண்டேலேலா ரினோங் கூறினார்.
“பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், பேசுவதா அல்லது அமைதியாக இருப்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக அந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
“மிக முக்கியமாக, பாலியல் துன்புறுத்தல்களைச் செய்பவர்களை ஊக்குவிப்பவர்களும் ஆதரவாளர்களும் பரபரப்பாக்கக்கூடாது. மற்றவர்கள் மறந்துவிடலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல,” என்று இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற அவர் நேற்று இரவு தனது கீச்சகம் வழி கூறினார்.
அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஹ்மத் ஃபைசல் அசுமு, தனது முன்னாள் பயிற்சியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கதையை, “இவ்வளவு காலம்” கழித்து வெளிப்படுத்தியதற்கான பண்டேலேலாவின் நோக்கங்களைக் கேள்வி எழுப்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தச் கீச் செய்யப்பட்டது.
“நான் முழு சூழ்நிலையையும் புரிந்துகொள்ள விரும்புகிறேன், ஏன் திடீரென்று, இவ்வளவு காலத்திற்குப் பிறகு, லீலா (பண்டேலேலா) தனது சமூக ஊடகத்தின் மூலம் ஓர் அறிக்கையை வெளியிட்டார்,” என்று அவர் கேட்டதாக ஃப்ரீ மலேசியா டுடே செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
பண்டேலேலாவின் அறிக்கை தொடர்பாக பல தேசிய விளையாட்டு வீரர்களைச் சந்தித்து, உண்மை நிலைமையைப் பெறுவதாகவும் பைசல் கூறினார்.
“அமைச்சர் என்ற முறையில், நான் தனிப்பட்ட முறையில் அழைப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளேன், மேலும் சில விளையாட்டு வீரர்களை இந்த விடயம் தொடர்பில் சந்தித்து பேசியுள்ளேன். எனவே, இப்போதைக்கு இந்த விடயத்தை பரப்புவது பொருத்தமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று, பாண்டேலேலா சமூக ஊடகங்களில், தனது பயிற்சியாளர்களில் ஒருவர் ஆபாச நகைச்சுவைகளைச் செய்யும் விருப்பம் கொண்டவராக இருந்ததாகவும், ஆனால் அவருக்குத் தலைமை பயிற்சியாளரின் ஆதரவு இருந்ததால், தன்னால் அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.
“முன்பு, எனக்கு ஆபாச நகைச்சுவைகளைச் செய்ய விரும்பும் ஒரு பயிற்சியாளர் இருந்தார், நான் அவரிடம் பயந்ததால், அமைதியாகவே இருந்தேன், சில சமயங்களில் போலியாக சிரித்துகூட இருக்கிறேன்.
நீச்சல் வீராங்கனை சிண்டி ஓங்
“ஒருமுறை என்னால் தாங்க முடியாமல், அவரைத் திட்டிவிட்டேன், ஆனால் அதற்காக நான் பகடி செய்யப்பட்டேன்.
“ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கினார்,” என்று அவர் கீச்சகத்தில் #ரேப்ஜோக்இஸ்நோட்ஃபன்னி (#rapejokeisnotfunny) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கூறினார், அதாவது ‘கற்பழிப்பு நகைச்சுவைகள் வேடிக்கையானவை அல்ல’ என்ற அர்த்தத்துடன்.
நடிகர் இராஜா ஃபரா இராஜா அஜீஸுடன் பலாத்காரக் காட்சியில் நடித்த அனுபவத்தை நடிகர் ஃபௌசி நவாவி விவரிக்கும் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அவரது அறிக்கை வந்தது.
பின்னர் தனது கருத்துக்கு ஃபௌசி மன்னிப்பு கேட்டார்.
கடந்த மே மாதம், நீச்சல் வீராங்கனை சிண்டி ஓங், தான் இளவயதில், தனது தேசியப் பயிற்சியாளர் உட்பட சிலரால், பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மலேசியாகினியிடம் கூறினார்.