‘முடா உறுப்பினர்களுக்குத் தண்டம் ஆனால், அம்னோ-பிஎன் உறுப்பினர்களுக்கு இல்லை’ – சையத் சாதிக் வருந்தம்

நேற்று மலாக்காவில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய பின்னர், கட்சி உறுப்பினருக்கு RM4,000 தண்டம் விதிக்கப்பட்டதற்கு முடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வருத்தம் தெரிவித்தார்.

சையத் சாதிக் கூறுகையில், திறந்தவெளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொண்டனர், உண்மையில் அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தனர் என்றார்.

எவ்வாறாயினும், அம்னோ மற்றும் தேசியக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில், எஸ்ஓபி-க்கள் மீறிய சம்பவங்களுக்கு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

“நாங்கள் ஒரு “திறந்தவெளி” பகுதியில், 10 நிமிடங்களுக்கு, ஐவர் மட்டுமே (சமூக இடைவெளியுடன்) கூடி பத்திரிக்கை சந்திப்பை நடத்தினோம்.

“தேசியக் கூட்டணி / அம்னோ, மூடிய மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்களுடன் ஒரு விழாவை நடத்தியது, முகக் கவரிகள் இல்லை, சமூக இடைவெளி இல்லை, அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை, தண்டமும் இல்லை.

“இது முட்டாள்தனம்,” என்று அவர் கீச்சகத்தில் கூறினார்.

முன்னதாக, கோவிட்-19 தொடர்பான எஸ்ஓபி-களை மீறியதாகக் கூறி, முடா உறுப்பினரான அமிரா ஐஸ்யாவுக்கு, காவல்துறையினரால் RM4,000 தண்டம் விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) போட்டியிடும் கட்சியின் முடிவை அறிவிப்பதற்காக, அந்த 10 நிமிடச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அக்டோபர் 23-ம் தேதி, மலாக்காவில் அம்னோ ஏற்பாடு செய்திருந்த விழாவைக் காட்டும் படத்தையும் சையத் சாதிக் பதிவேற்றினார், அதில் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக்கும் கலந்துகொண்டார்.

புகைப்படங்களில், அங்கிருந்தவர்களிடையே சமூக இடைவெளி இல்லை, அதே நேரத்தில் 12 பேர் முகக்கவரி அணியாதது அல்லது சரியாக அணியாதது கண்டறியப்பட்டது.

மலாக்கா தற்போது தேசிய மறுவாழ்வு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் உள்ளது.

மலாக்கா தற்போது தேசிய மீட்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தில் உள்ளது.

தேசியப் பாதுகாப்பு மன்றம் வழங்கிய எஸ்.ஓ.பி.-இன் அடிப்படையில், பொது இடங்களில் இருக்கும்போது முகக்கவரியைச் சரியாக அணிய வேண்டும்.

கடந்த ஆண்டு சபா பிஆர்என்-க்குப் பிறகு நடந்தது போல், கோவிட்-19 தொற்றுநோய் மீண்டும் நிகழும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து, மலாக்கா பிஆர்என் காலத்தில் அனைத்து உடல் ரீதியான கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் சமூக நிகழ்வுகளை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளது.

அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை தடை அமலில் உள்ளது.