சையத் சாதிக் : தீமா பிரச்சினையில் செலுத்தும் கவனத்தை, ஏன் RM620 மில்லியன் கசிவு பிரச்சினையில் காட்டவில்லை?

நாடாளுமன்றம் | சையத் சாதிக் சையத் அப்துல் இரஹ்மான், தீமா விஸ்கி மீதான சர்ச்சையில் செலுத்திய அதே கவனத்தை, நல்லாட்சி மற்றும் பொதுநலப் பிரச்சினைகளில் அரசு செலுத்துகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

இன்றைய வரவு செலவுத் திட்டம் 2022 விவாதத்தில், நல்லாட்சியைக் காட்டிலும் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதைக் காண முடிகிறது என்று சையத் சாதிக் கூறினார்.

“நிதியமைச்சர் (தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்) அறிவித்தது நல்லதுதான், ஆனால் இந்த அறிவிப்பு முறையாகச் செயல்படுத்தப்படாவிட்டால் வீணாகி விடும். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதே முக்கியமானது. இதுதான் இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏழை அல்லது பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ 150,000 எலக்ட்ரானிக் கேஜெட்களை வழங்குவதில் அரசாங்கத்தின் இயலாமை மற்றும் 2020-ஆம் ஆண்டில் பொது நிதி இழப்பு, ஒழுங்கற்ற கொடுப்பனவுகள், RM620.07 மில்லியன் விரயம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நாட்டின் தலைமை தணிக்கையாளரின் சமீபத்திய அறிக்கையைச் சையத் சாதிக் எடுத்துரைத்தார்.

“நாம் விவாதம் மற்றும் செயல்படுத்தல், தரவு மற்றும் அறிவியல் பற்றி அரிதாகவே கேட்கிறோம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில், நாம் என்ன பிரச்சினையைக் கேட்டோம்? (விஸ்கி) தீமாவின் பிரச்சினை, நாம் தீமாவின் பெயரை மாற்றினோம்.

“சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீமா விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டதா, கூட்டத்தில் பெயரைப் பற்றி விவாதம் நடந்ததா? தீமா விவகாரத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டிய மூன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள், பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் மட்டும், அதே நிலையிலான கவனம், அதே நிலையிலான விமர்சனம் RM620 மில்லியன் மக்கள் பணக் கசிவுகள் மீது உள்ளதா?

ஸ்காட்லாந்தில் நடந்து வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு 2021 (COP26) -இல் கலந்து கொள்ளவில்லை, ஆனால் தீமா பிரச்சினையில் கவனம் செலுத்துகிறார் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான்-ஐயும் சையத் சாதிக் சாடினார்.

“நாம் என்ன மாதிரியான செய்தியை இங்கு அனுப்புகிறோம்? முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினையை விட, ஒரு பொருளின் பிராண்ட் பெயர் முக்கியமா? தேவையற்றப் பிரச்சினைக்கு இவ்வளவு முயற்சிகள் உள்ளன, ஆனால் நமக்கு நெருக்கமான பிரச்சினைக்குப் போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

அக்டோபர் 30-ம் தேதி, துவான் இப்ராஹிம் பாஸ் இளைஞர் பிரிவு அல்லது முக்தாமரின் வருடாந்திர பிரதிநிதிகள் கூட்டத்தில், “பொது அச்சத்தை” ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளை விற்க முடியாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக, பாஸ் உட்பட பல தரப்பினரும் அரசியல்வாதிகளும், “தீமா” மதுபான பிராண்ட் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கூறினர், ஏனெனில் அது நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவின் பெயரை ஒத்திருக்கிறது என்று.