‘இரண்டாவது போராட்டத்தை நடத்த திட்டம்’ – ஹர்த்தால் ஒப்பந்த மருத்துவர் குழு

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2022 பட்ஜெட்டின் மூலம் வெளியிடப்பட்ட  அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் குழு (எச்டிகே) இரண்டாவது வேலைநிறுத்தத்தை நடத்தவுள்ளது.

பயிற்சி மருத்துவர்களின் ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டது.

அவர்களின் முக்கியக் கோரிக்கைகளான, வேலை வாய்ப்புகள் மற்றும் உத்தரவாதங்களுக்கு உறுதியளிக்காததால் நேரத்தை நீட்டிப்பது நேரத்தை வீணடிப்பதாகக் கூறியது என்று அக்குழு நேற்றிரவு கீச்சகத்தில் கூறியுள்ளது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் சுகாதார அமைச்சு மீதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

“ஐந்தாண்டுகள் விவாதம். இன்னும் தீர்வு இல்லை. இ.பி.எப். சலுகையுடன் நிரந்தர நியமனம் என்று அடிக்கடி அறிவிக்கப்படும் வாக்குறுதிகள், நாங்கள் பேசாமல் இருப்பதற்கான தூண்டில் தான்.

“கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இரண்டு வருடங்கள் போராடியப் பிறகும், ஒப்பந்த மருத்துவர்களின் தியாகங்கள் பாராட்டப்படாமல் இருக்கின்றன.

“எனவே, எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, எச்டிகே இயக்கம் ‘ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக் 2.0’ நடத்தவுள்ளது என்று நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டாவது போராட்டம் எப்போது நடத்தப்படும் என்று கேட்டதற்கு, எச்டிகே பிரதிநிதி டாக்டர் முஸ்தபா கமல், “விரைவில்” என்றார்.

ஜூலையில், இந்த இயக்கம் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான ஒப்பந்த மருத்துவர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டியது.

எச்டிகே இயக்கம், நிரந்தர பயிற்சி மருத்துவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களுக்கும் இடையிலான தற்போதைய “இரு தர முறையை” முடிவுக்கு கொண்டுவரப் பிரச்சாரம் செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவர்கள் நிபுணர்களாக ஆவதற்கு உள்ளூர் முதுகலை உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள்.

ஐந்து வருட ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர்களுக்கு நிரந்தர பதவி உத்தரவாதமும் இல்லை.

எச்.டி.கே.யுடன் இணைந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் முன்னதாக உறுதியளித்திருந்தார்.

பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்த மருத்துவர்களின் சங்கத்தை உருவாக்கும் பணியில் எச்.டி.கே. ஈடுபட்டுள்ளது.