‘பல்கலைக்கழகச் சலுகைக் கடிதத்தை, அம்னோ பிரிவுத் தலைவர் ஏன் சமர்ப்பித்தார்?’

வருங்கால மாணவர்களுக்குச் சலுகைக் கடிதங்களை வழங்க, அரசியல்வாதிகளைப் பயன்படுத்தும் பொதுப் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் குறித்து பெர்கெராக்கான் தெனாகா அகாடமிக் மலேசியா (கெராக்) கேள்வி எழுப்பியது.

வட மலேசியப் பல்கலைக்கழகம் (யுயுஎம்) சார்பாக, அந்த ஆவணத்தை அம்னோவைச் சார்ந்த தலைவர் சிக் முகமட் தாஜுடின் அப்துல்லா சமர்பித்த நடவடிக்கையை அந்தக் குழு குறிப்பிடுகிறது.

“கேள்வி என்னவென்றால் : யுயுஎம் – அல்லது ஏதேனும் ஒரு பொது பல்கலைக்கழகம் – அவர்கள் சார்பாக, ஓர் அரசியல் கட்சியின் தலைவரைச் சலுகைக் கடிதத்தைச் சமர்ப்பிக்கச் செய்வதன் தேவை என்ன?

“மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த உறவு எங்கிருந்து தொடங்கியது, அது எப்போது முடிவடையும்?” எனக் கல்வி சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு குழுவான கெராக் கேள்வி எழுப்பியது.

யுயுஎம் ஒரு பொது உயர்க்கல்வி நிறுவனமாக, வரி செலுத்துபவர்களால் நிதியளிக்கப்படுகிறது மற்றும் எந்தக் கட்சிக்கும் அது சொந்தமானது அல்ல என்று அந்த இயக்கம் வலியுறுத்தியது.

எனவே, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேல்நிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் சமுதாயத்திற்குத் திரும்ப கொடுக்க வேண்டும் என்றார்.

“அதைச் செய்ய, யுயுஎம் போன்ற பொதுப் பல்கலைக்கழகங்கள், எந்த வெளிப்புற அழுத்தத்திலிருந்தும் விடுபட வேண்டும்,” என்று கெராக் கூறியது.