நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கடற்படை இராணுவப் பயிற்சி மாணவர் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைனின் தற்செயலான மரணத்திற்குக் காரணமான குற்றச்சாட்டில், மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (யுபிஎன்எம்) 6 மாணவர்கள் இன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரூபிப்பதில், தற்காப்பு குழு வெற்றி பெற்றதைக் கண்டறிந்த நீதிபதி அஸ்மான் அப்துல்லா இந்த முடிவை எடுத்தார்.
“இதன் மூலம் நீங்கள் ஆறு பேரும் பொதுவான நோக்கத்துடனும், ஆறாவது குற்றவாளியான (அப்துல் ஹக்கீம்) உந்துதலுடனும், குற்றவியல் சட்டத்தின் 304 (a) பிரிவின் கீழ், இறந்தவரை (சுல்பர்ஹான் ஒஸ்மான்) கொல்லும் நோக்கமின்றி காயப்படுத்தும் நோக்கத்துடன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டீர்கள்,” என்று நீதிபதி கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் முன்பு கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர், அதே நேரத்தில் அப்துல் ஹக்கீம் அதே சட்டப் பிரிவு 109-இன் கீழ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் அவரது நண்பர்கள் 12 பேரும் ஜுல்பர்ஹான் ஒஸ்மானைக் காயப்படுத்தியக் குற்றச்சாட்டின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 330-வது பிரிவின் கீழ் அதேக் குறியீட்டின் பிரிவு 34-உடன் வாசிக்கப்பட்டனர்.
2017, மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், சுங்கை பெசி, கேம் பெர்டானாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஜெபாட் மாணவர் தங்கும் விடுதியின் இரண்டு அறைகளில், இக்குற்றத்தைச் செய்ததாக இப்போது 25 வயதுடைய அவர்கள் அனைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
ஜுல்பர்ஹான் ஒஸ்மான், செர்டாங் மருத்துவமனையில், 1 ஜூன் 2017 அன்று இறந்தார்.
- பெர்னாமா