கட்சி தாவல் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவளிக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்- அஸாலினா வலியுறுத்து

பெங்கராங் எம்.பி. அஸலினா ஓத்மான் சைட், அவர் முன்மொழிந்த “ஹைப்ரிட்” கட்சி தாவல் எதிர்ப்பு மசோதா மலாக்கா வாக்காளர்களுக்கு ஒரு முக்கியப் பரிசீலனையாக இருக்க வேண்டும் என்று கூறி, அவர்களிடம் அம்மசோதாவை விளம்பரப்படுத்தினார்.

அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யவும், இடைத்தேர்தல் நடத்த வழிவகை செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்ப வாக்காளர்களை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சிகளை மாற்றுவதற்குப் பெரும்பான்மையினர் ஆதரவாக இருந்தால், அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பினால், மனுவை நிராகரிப்பதற்கான விருப்பத்தையும் வாக்காளர்களுக்கு இந்த மசோதா வழங்குகிறது.

தனது கீச்சகத்தின் மூலம், அஸலினா, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மலாக்கா மாநில அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம் மாநில அளவில் இந்த மசோதாவைச் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

“#RUUHibrid மலாக்காவின் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க முடியும்! மலாக்கா மாநில அரசு யார் தலைமையில் இருந்தாலும் இந்த #RUUHibrid -ஐ உருவாக்க வேண்டும்.

“கட்சி தாவுவதற்கான அறிகுறிகளை நாங்கள் ஒன்றாக நிறுத்துவோம். மலேசியாவில் விவேகமான அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரமும் உரிமையும் வாக்காளர்களுக்கு உண்டு,” என்றார் அவர்.

2018-ஆம் ஆண்டு முதல், மலேசிய அரசியலில் கட்சித் தாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

பிஎன் தலைமையிலான மாநில அரசாங்கத்தில் இருந்து, நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதன் விளைவாகவும் மலாக்காவில் உடனடித் தேர்தல் நடக்கவுள்ளது.

முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஹரோன் தலைமையிலான கட்சியினர், தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு முன் பக்காத்தான் ஹராப்பானுடன் ஆலோசனை நடத்தியதைப் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.

முன்னதாக, 2020-இல், கட்சித் தாவல் பிஎச் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

டிஏபி-யின் ஆட்சேபனைகளை மீறி, பிகேஆர்-உம் அமானாவும் இட்ரிஸ் மற்றும் முன்னாள் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் நோர் அஸ்மான் ஹாசன் இருவரும் பிஎச்-இன் கீழ் போட்டியிட விண்ணப்பிக்கின்றனர்.