பாஸ் தலைவராக ஹாடி அவாங் நிலைநிறுத்தப்பட்டார்

பாஸ் கட்சியின் 67-வது வருடாந்த மாநாட்டு அமர்வில், அப்துல் ஹாடி அவாங், அடுத்த ஈராண்டுகளுக்கு (2021-2023) கட்சியின் தலைவராக உயர்மட்டக் குழுத் தேர்தலில் போட்டியிடாமல் வெற்றி பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர், தக்கியுடின் ஹாசன், எந்த வேட்பாளரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததால், கட்சியின் துணைத் தலைவராக துவான் இப்ராகிம் துவான் மான் தொடர்ந்து இருப்பார் என்று அறிவித்தார்.

“இருவரும் போட்டியில்லாமல் வெற்றி பெற்றதையடுத்து, ஹுசின் இஸ்மாயில் நிரந்தரத் தலைவராகவும், கமல் ஆஷாரி நிரந்தரத் துணைத் தலைவராகவும் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்,” என்று அவர் நேற்று கட்சியின் ஆண்டு மாநாட்டுடன் இணைந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) இட்ரிஸ் அகமது, திரெங்கானு மந்திரி பெசார் டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார், கிளந்தான் துணை மந்திரி பெசார் முகமட் அமர் நிக் அப்துல்லா மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஜூடி மர்ஸுக்கி ஆகிய நால்வரும் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் அந்தப் பதவிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், போட்டியில் இருந்து அவர் விலகினார். மத்திய செயற்குழு உறுப்பினர்களாக 18 இடங்களை நிரப்ப 36 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கோல திரெங்கானுவில், இவ்வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள 67-வது ஆண்டுப் பொதுச் சபையில், 1,546 பிரதிநிதிகளில் 694 பேர் கலந்துகொள்வார்கள், மீதமுள்ளவர்கள் இயங்கலையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தக்கியுடின் கூறினார்.

“நாங்கள் மற்ற அரசியல் கட்சி நண்பர்களையும் அழைக்கவில்லை. பாஸ் மூத்தத் தலைவர்கள் போன்று, சில தரப்பினருக்கு மட்டுமே நாங்கள் அழைப்பிதழ்களை அனுப்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா