சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரின் படத்தைத் ‘தேடப்படும் நபர்’ எனப் போலீசார் பரப்பினர்

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரீவ்காஸில் பிரவுனுக்கு எதிராக, செப்டம்பர் மாதம் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.

“இவரைப் பற்றி அறிந்தவர்கள் அல்லது தகவல் உள்ளவர்கள், 019-7051222 என்ற எண்ணில் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுப்ரிடானன்ட் ஜுனைனா கஸ்போலா அல்லது வழக்கு விசாரணை அதிகாரி ஏஎஸ்பி முகமட் கைருல் ரிட்ஜுவான் கிருட்டினை 017- 6404440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-இன் கீழ், சுல்தானா திரெங்கானு நூர் ஜாஹிரா மீதான அவதூறு குற்றச்சாட்டுகளில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23, 2021 அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த eTA3507737 கைது ஆணைக்குப் பெயர் குறிப்பிடப்பட்டவர் தேவை,” என்று புக்கிட் அமான் குற்றவியல் துறை இயக்குநர் அப்துல் ஜலீல் ஹாசன் கூறினார்.

ரீவ்காஸில் பிரவுன் தனது புத்தகமான “தி சரவாக் ரிப்போர்ட் – 1எம்டிபியின் கதை”-யில் (The Sarawak Report – The inside story of 1MDB) திரெங்கானு சுல்தானாவை அவதூறாகப் பேசியதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 500 அவதூறு குற்றத்தைக் கையாள்கிறது, அக்குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரீவ்காஸில் பிரவுன், இங்கிலாந்தின் கிளாஸ்கோ’வில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் “கட்டுமரக் கொள்ளை கும்பல்” (Logging Mafia) குறித்த கருத்தரங்கை நடத்த இருப்பதாகவும், இயங்கலையிலும் அக்கருத்தரங்கைப் பார்க்கலாம் என்றும் கூறினார்.

நவம்பர் 21-ஆம் தேதி, இலண்டனில் நடைபெறும் பத்திரிகை சுதந்திர விழாவிலும், அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் மற்றொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வேன் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமக்கு எதிரான கைது ஆணை பற்றி தெளிவாக குறிப்பிடவுள்ளதாக அவர் சொன்னார்.