தேசிய மறுவாழ்வு மன்றம் (எம்பிஎன்), ஜனவரி 1-ஆம் தேதிக்குள் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் என்று கூறியது.
இன்று எம்.பி.என். தலைவர் முஹைதீன் யாசின் இந்த விடயத்தை அறிவித்தார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இல்லாதக் காரணத்தால், சுற்றுலாத் துறையின் மீட்பு செயல்முறை ஒப்பீட்டளவில் மெதுவாகவே உள்ளது என்று முஹைதின் கூறினார்.
“நாட்டின் சிறந்த தடுப்பூசி திட்டத்தின் சாதனை அளவைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் துறையின் மீட்சியை விரைவுபடுத்துவதற்காக, 2022 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் நாட்டின் எல்லைகளைச் சர்வதேச சுற்றுப் பயணிகளுக்குத் திறக்க வேண்டும் என்று இன்றையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
2021 -ஆம் ஆண்டின் 2 -வது காலாண்டிற்கான நாட்டின் பொருளாதாரச் செயல்திறன், உற்பத்தித் துறையைத் தவிர, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குக் கீழே இருப்பதாகக் கூறிய, தலைமைப் புள்ளியியல் அதிகாரி முகமட் உசிர் மஹிதின், பொருளாதாரம் குறித்தும் எம்பிஎன் -க்கு விளக்கமளித்ததாக முஹிடின் கூறினார்.
“2021 -ஆம் ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுக்கான நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டம், பொருளாதார நிலைமை இன்னும் சவாலாக இருப்பதைக் காட்டுகிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
நாடு அதன் பொருளாதார இலக்குகளை அடைவதை உறுதிசெய்ய, அரசாங்கம் மேலும் பலவற்றைச் செய்யும் என்று முஹைதீன் கூறினார்.
கடந்த ஆண்டு, நாட்டின் பொருளாதாரம் 5.6 விழுக்காடு சுருங்கியதை அடுத்து, இந்த ஆண்டு ஜிடிபி மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை வளரும் என்று பேங்க் நெகாரா ஆகஸ்ட் மாதம் கணித்திருந்தது.
இதற்கிடையில், குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டிஸைமி, தொழிலாளர் தேவைகள் மற்றும் மனித வள மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் மன்றத்திடம் விவாதித்ததாக முகைதின் கூறினார்.
“பல்வேறு பொருளாதாரத் துறைகள் எதிர்கொள்ளும் மனிதவளப் பற்றாக்குறையின் சிக்கலைக் குறைக்க உதவ, குடிவரவுத் துறையால் செயல்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்றம் கவனத்தில் எடுத்துகொள்கிறது,” என்று அவர் கூறினார்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முஹைதீன் விரிவாக விளக்கவில்லை. மற்றவற்றுடன், இந்தத் திட்டம் ஆவணமற்ற வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும்.
தினசரி கோவிட்-19 நேர்வுகள், இறப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மற்றும் அதிகத் தடுப்பூசி விகிதங்களால் குறைந்து வரும் புதிய நேர்வுகளின் போக்கு குறித்து சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் விளக்கத்தில் திருப்தி அடைந்ததாக எம்பிஎன் தெரிவித்துள்ளது.