தேசியக் கூட்டணி (பிஎன்) தலைவர் முஹைதீன் யாசின், மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) தங்கள் வேட்பாளர்களைத் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தக் கூட்டணிக்கு இடம் தருமாறு கேட்டார்.
“நேற்று, தொலைக்காட்சியில், வேறு எந்தக் கட்சியும் போட்டியிடாதது போல் பார்த்தேன்.
“பாரிசான் நேசனல் மட்டும்தான் இருந்தது; பக்காத்தான் ஹராப்பான் ஓரளவு மட்டுமே. பிஎன் இல்லவே இல்லை என்பது போல் உள்ளது,” என்று நேற்று இரவு முகநூலில் நேரலையாக ஒளிபரப்பான ‘மலாக்கா பிஆர்என் பெந்தாஸ்’ (மேடை) நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
அத்தகைய சூழ்நிலை, பிஎன் வேட்பாளர்களுக்கு நியாயமான மற்றும் சமமான இடத்தைக் கொடுக்கவில்லை என்று முஹைதீன் கூறினார்.
“கோவிட் -19 தொற்றுநோயின் போது, கடினமான சூழ்நிலையில் எங்கள் கட்சியையும் எங்கள் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்த இடமும் வாய்ப்பும் இருக்கும் வகையில் பிரதமர், தகவல் அமைச்சர், அன்னுவார் மூசா மற்றும் தற்போதுள்ள தொலைக்காட்சி, ஊடகங்கள் நியாயமாக இருக்க வேண்டிமெனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
வேட்பாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு, நேருக்கு நேர் பிரச்சாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“வாக்காளர்களைச் சந்திக்க வேட்பாளர் வரவில்லை என்றால், அது ஒரு நல்ல பிம்பத்தைக் கொடுக்காது என்று நான் நினைக்கிறேன், நாங்கள் திமிர்பிடித்தவர்கள், (வாக்காளர்களை) சந்திக்கத் தயாராக இல்லை என்று அவர்கள் எண்ணக்கூடும்.
“கிராமத்தில் நாங்கள் அவர்களைச் சந்திக்க வருவோம் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், ஆனால் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்ய எதிர்க்கட்சிகள் உட்பட மலாக்கா பிஆர்என் வேட்பாளர்களுக்கு இடம் கொடுப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நேற்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுார் மூசா தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக புதிய வேட்பாளர்கள் புதிய நெறிமுறைகளின் சூழலில் பிரச்சாரம் செய்ய எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் புரிந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று அன்னுவார் கூறினார்.