ஆடிப் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு – அரசு அறிவித்தது

தீயணைப்பு வீரர், மறைந்த முஹம்மது அடிப் முகமது காசிமின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியலை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாபர் இன்று ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

வான் ஜுனைடியைத் தவிர, இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின்; வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன்; சட்டத்துறை தலைவர் இட்ரூஸ் ஹருன் மற்றும் முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கமர்டின் ஹாஷிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இதில், ஆர்.சி.எஸ்.ஐ. & யுசிடி தடயவியல் நோயியல் நிபுணத்துவ மூத்த ஆலோசகர் (பினாங்கு வளாகம்); டாக்டர் பூபிந்தர் சிங் ஜெஸ்வந்த் சிங், மலாயா பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் லூய் லாய் மெங், மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் முன்னாள் இணைப் பேராசிரியரும், சட்டப் பயிற்சியாளருமான டாக்டர் எம்.பி. சுந்தரமூர்த்தி; பிடிஆர்எம் தடயவியல் தலைமை உதவி இயக்குநர் (D10), அசாரி அப்துல் இரஹ்மான் மற்றும் பிடிஆர்எம் விசாரணை அறிவியல் மற்றும் வழக்கு விசாரணை மையத் தலைவர், எஸ்.ஏ.சி. முகமது அப்துல் ஹமீத் ஆகியோரும் உள்ளனர்.

சட்ட விவகாரப் பிரிவைச் சார்ந்த வான் ஜுனைடி கூறுகையில், இந்தச் சிறப்புக் குழுவிற்கு உள்துறை அமைச்சு மற்றும் வீட்டுவசதி & உள்ளூராட்சி அமைச்சின் இணைச் செயலகமாக பிரதமர் துறை இருக்கும் என்றார்.

“அக்டோபர் 29, 2021 அன்று அமைச்சரவையின் முடிவின்படி, குழு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கும்,” என்று அவர் கூறினார்.

முஹம்மது அடிப்பின் மரணம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்புக் குழுவை நிறுவுவதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அக்டோபர் 9 அன்று அறிவித்தார்.

27 நவம்பர் 2018 அன்று, யுஎஸ்ஜே 25, சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தின் போது முஹம்மது அடிப் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

அவர், 17 டிசம்பர் 2018 அன்று, தேசிய இதய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது காயங்கள் காரணமாக இறந்தார்.

இது விபத்தா அல்லது வேண்டுமென்றே தாக்கப்பட்டாரா என்ற காரணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 27, 2019 அன்று, இரண்டு அல்லது மூன்று அடையாளம் தெரியாத நபர்களின் குற்றச் செயல்களால் அடிப்பின் மரணம் நிகழ்ந்தது என்று ஷா ஆலம் குரோனர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.