தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் பிபிஎன் நெகிழ்வுத்தன்மையை இழக்க நேரிடும் – அகோங்

தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) நெகிழ்வுத்தன்மையை, மக்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், அந்த வசதிகளை மீண்டும் இழக்க நேரிடும் என்பதை மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று நினைவூட்டினார்.

அனைத்து தரப்பினரும் முந்தைய பல்வேறு சோதனைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாடு முற்றிலும் விடுபடும் வரை தொடர்ந்து பங்களிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

மக்கள் அவர்தம் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதோடு, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் வகுத்துள்ள விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று, இன்று இஸ்தானா நெகாராவில் அகோங்கின் 2021 அதிகாரப்பூர்வப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூறினார்.

பேரரசருடன், பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் இருந்தார்.

ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்ட இன்றைய கொண்டாட்டம், கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை குறையாததால் நடைபெறவில்லை.

“நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயின் நிலைமை இப்போது மேம்பட்டு வருகிறது, நாடு படிப்படியாக பிபிஎன் -இன் கடைசி கட்டத்திற்கு நகர்கிறது, இது எனது மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது,” என்று யாங் டி-பெர்த்துவான் அகோங் கூறினார்.

  • பெர்னாமா