தேகூ-இன் முதல்வர் வேட்பாளராக மாஸ் எர்மியாத்தி தேர்வு

மலாக்கா பிஆர்என் | எதிர்பார்த்தபடி, மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின், தேசியக் கூட்டணியின் (தேகூ) முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று, கோலாலம்பூரில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பைக் கூட்டணியின் தலைமையகத்தில் தேகூ தலைவர் முஹைதின் யாசின் வெளியிட்டார்.

இந்தப் பிஆர்என் -இல், மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் அமைந்துள்ள தஞ்சோங் பிடாரா தொகுதியில், தேகூ மாஸ் எர்மியாத்தி-ஐ போட்டியிட வைத்தது.

முஹைதின் கருத்துப்படி, அந்தப் பிரதமர் துறையின் துணை அமைச்சரின் பெயரை தேசியக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

முஹைதின் மேலும் கூறுகையில், வரலாற்றில் முதன்முறையாக, தகுதி வாய்ந்த, தொழில்முறை, இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த பெண் வேட்பாளர் மலாக்காவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு விழாவில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் ஹோ சாய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மலாக்கா மாநிலத் தொகுதியில் பெரும்பான்மையான இடங்களைத் தேகூ வென்றெடுத்தால், போட்டியிட்ட இடத்தில் மாஸ் எர்மியாத்தி வெற்றி பெற்றால், அவர் முதல்வராக நியமிக்கப்படும் முதல் பெண்மணி ஆவார்.

முன்னதாக, அம்னோ-பிஎன் முதலில் தங்கள் முதல்வர் வேட்பாளர் சுலைமான் எம்டி அலியை நவம்பர் 8 அன்று அறிவித்தது, அதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்லி ஜஹாரியைப் பரிந்துரைத்தது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு முதலமைச்சராகப் பதவி வகித்தவர்கள்

மொத்தத்தில், மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றங்கள் உள்ளன, அதாவது கோலா லிங்கி, தஞ்சோங் பிடாரா, அயேர் லிமாவ், லெண்டு மற்றும் தபோ நானிங்.

கடந்த ஜிஇ-இல், அம்னோ-பிஎன் மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதி உட்பட அனைத்து இடங்களையும் வென்றது. இருப்பினும், மாஸ் எர்மியாத்தி கட்சியை விட்டு வெளியேறி பெர்சத்துவில் சேர்ந்தார்.

தற்போது அவர் பிரதமர் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக மாஸ் எர்மியாத்தி உத்தியோகபூர்வமாக முன்மொழியப்பட்ட நிலையில், தஞ்சோங் பிடாரா தொகுதியில் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏனெனில் அங்குதான் மலாக்கா அம்னோ தலைவர் அப்துல் ரவூப் யூசோவும் போட்டியிடுகிறார்.

அங்குப் போட்டியிடும் மற்றொரு வேட்பாளர், பிஎச் பிரதிநிதி ஜைனல் ஹாசான் ஆவார்.