கோவிட்-19 நேர்வுகளின் அதிகரிப்பை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கை அதிகரித்து வருவதால், சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறையானது, அதிகமான கோவிட்-19 நோயாளிகளைத் தங்க வைப்பதற்கான மருத்துவமனை மற்றும் அதன் வசதிகளுக்கான தயாரிப்புகளைச் செய்துள்ளது.

சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ங்காடிமான் இன்று ஓர் அறிக்கையில் பல ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தினார்.

சிலாங்கூரில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையின், ஐசியு படுக்கை பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காடு, அதாவது 203 படுக்கைகளை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

அந்த எண்ணிக்கையில், 42 விழுக்காடு (86 படுக்கைகள்) கோவிட்-19 நேர்வுகளுக்கானது. மீதமுள்ள 58 விழுக்காடு (117 படுக்கைகள்) கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கானது.

இதற்கிடையில், கோவிட் -19 நேர்வுகளுக்குச் சிகிச்சையளிக்க முழுமையாகப் பயன்படுத்தப்படும் சுங்கை பூலோ மருத்துவமனையில், 90 விழுக்காடு ஐசியு படுக்கைகள் (54 படுக்கைகள்) பயன்படுத்தப்படுகின்றன.

“சுங்கை பூலோ மருத்துவமனை ஐசியூவில், கோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பதைப் பொறுத்தவரை, இந்த மருத்துவமனை முழு கோவிட்-19 மருத்துவமனையாகவும், சிலாங்கூரில் மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கோவிட்-19 பரிந்துரை மருத்துவமனையாகவும் உள்ளது.

“எனவே, சுங்கை பூலோ மருத்துவமனையின் ஐசியூ மற்ற மருத்துவமனைகளிலிருந்து கோவிட் -19 நேர்வுகளைப் பெறுகிறது, இதனால் மற்ற மருத்துவமனைகளின் ஐசியூ கோவிட் -19 அல்லாத நேர்வுகளுக்கு இடமளிக்கப் பயன்படும்,” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 வார்டில் உள்ள படுக்கைகளும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

ஷாரியின் கூற்றுப்படி, ஆபத்தான நோயாளிகளுக்கான 1,286 படுக்கைகளில் 92 விழுக்காடு நோயாளிகளுக்கு இடமளிக்கிறது.

இந்த டிசம்பரில், கோவிட்-19 அலை ஏற்படும் என்பது தொடர்பாக சுங்கை பூலோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு கீச்சகச் செய்தியி, மருத்துவமனையில் உள்ள வழக்கமான வார்டுகள் மற்றும் ஐசியுக்கள் இப்போது வகை 4 மற்றும் 5 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நேர்வுகள் அதிகரிப்பதற்கான “ஆரம்ப அறிகுறிகள்” குறித்து பொதுமக்களை எச்சரித்தார்.

இன்று, ஷாரி சிலாங்கூரில் தொற்றுநோய் அல்லது ஆர்-நாட்டின் மதிப்பைத் தொட்டு பேசினார், நேற்றைய நிலவரப்படி அது 1.05 ஆக உயர்ந்துள்ளது.

1.00 -க்கும் அதிகமான மதிப்பு, அதிகரித்த தொற்றுநோயைக் குறிக்கின்றன.

“கடந்த இரண்டு வாரங்களில், சிலாங்கூரில் புதிய தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை 1,300 முதல் 1,500 நேர்வுகள் ஆகும், இதில் 1.5 முதல் 2 விழுக்காட்டினர் 3, 4 மற்றும் 5 வகையைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் கூறினார்.

வகை 3 என்பது நுரையீரல் தொற்று போன்ற தீவிர அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளைக் குறிக்கிறது.

வகை 4 என்பது தொற்று மற்றும் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் வகை 5 என்பது உள் உறுப்பு செயலிழப்பு மற்றும் சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளைக் குறிக்கிறது.

“சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கோவிட்-19 நேர்வுகளின் அதிகரித்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசியத் தொழுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் (பி.கே.கே.என்.) உள்ள ஆக்ஸிஜன் எரிவாயு அமைப்பு, கோவிட்-19 நேர்வுகளுக்கு இடமளிப்பதற்கும், சுங்கை பூலோ மருத்துவமனையின் சுமையைக் குறைக்க உதவுவதற்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

“அதுமட்டுமின்றி, கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனை அல்லது ஐசியுவில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையைப் பூர்த்தி செய்ய, சுங்கை பூலோ மருத்துவமனை கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற மருத்துவமனைகளால் ஆதரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.