பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், தமது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி போன்ற பல இனத் தொகுதி ஒன்றிப் போட்டியிடுவதின் மூலம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாம் சொல்வதைச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
“மலேசியாவின் பல இனத் தோற்றம் பற்றியும் உருமாற்றம் பற்றியும் பேசும் போது ஒரே மலேசியா தொகுதி ஒன்றில் போட்டியிடும் சாத்தியம் பற்றி பிரதமர் பரிசீலிக்க வேண்டும். அந்தச் செய்தியை சைபுதின் பிரதமரிடம் வழங்குவார் என நான் நம்புகிறேன்.”
“எனக்குத் தெரிந்த வரை பெக்கான் 93 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டதாகும்.”
“ஆகவே ஒரே மலேசியா என அவர் சொல்வதற்கு இணங்க லெம்பா பந்தாய் போன்ற பல இனத் தொகுதியில் போட்டி போட வேண்டும்,” என நுருல் இஸ்ஸா ஷா அலாமில் அரசியல் கருத்தரங்கு ஒன்றில் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துணை அமைச்சருமான சைபுதின் அப்துல்லாவிடம் கூறினார்.
அவர் அந்த யோசனையை சொன்னதும் கூட்டத்தினர் கை தட்டி வரவேற்றனர்.
என்றாலும் பின்னர் மலேசியாகினி நிருபரைச் சந்தித்த நுருல் இஸ்ஸா, இது நஜிப்புக்கு விடுக்கப்படும் சவால் அல்ல என்றார். ஆனால் நஜிப் தாம் சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
“13வது பொதுத் தேர்தல்: யாருடைய வாக்குகள் முடிவு செய்யும்” என்னும் தலைப்பைக் கொண்ட அந்த கருத்தரங்கில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர்களில் நுருல் இஸ்ஸாவும் சைபுதினும் அடங்குவர்.