மலாக்கா முன்னாள் முதல்வர் காடேக்’கில் களம் இறங்கினார்

மலாக்கா பிஆர்என் | மலாக்கா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முகமது கலீல் யாக்கோப் தொடர்ந்து மூன்றாவது நாளாக, இன்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) பிரச்சாரத்தில் பங்கேற்றார்.

இம்முறை, காடேக் மாநிலத் தொகுதியில் உள்ள கம்போங் தஞ்சூங் ரிமாவ் டாலாமில் மக்களுடனான சந்திப்பில் அவர் பங்கேற்றார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டதாகவும், அரசியல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்றும் அம்னோவின் முன்னாள் பொதுச் செயலாளருமான அவர் கூறினார்.

“நான் ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டது, அதனால் எந்த அரசியல் கேள்விக்கும் என்னால் பதிலளிக்க முடியாது, ஆனால் இந்த வேட்பாளர் பலரால் விரும்பப்படுகிறார், அவர் கடினமாக உழைக்கிறார் மற்றும் ஆற்றல் மிக்கவர்,” என்று அவர் பிஎச் வேட்பாளர் பற்றி கூறினார்.

இம்முறை மலாக்கா பிஆர்என்-இல், 2018 -இல் பிஎச் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி சாமிநாதன் மீண்டும் அங்கு முன்மொழியப்பட்டுள்ளார். அவர் பி சண்முகம் (தேசிய முன்னணி – மஇகா), லைலா நோரிண்டா மாவோன் (புத்ரா), முகமட் அமிர் ஃபித்ரி முஹாராம் (தேசியக் கூட்டணி – பெர்சத்து) மற்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான மோகன் சிங், அஜஃபென் அமின் என ஐந்து வேட்பாளர்களுடன் கடுமையான போட்டியில் உள்ளார்.

அரசியல் உலகம் முகமது கலீலுக்குப் புதியதல்ல. மலாக்காவின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 13 ஆண்டுகள் பகாங் மந்திரி பெசாராகவும் அமைச்சரவையில் தகவல் பிரிவு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அவர் மே 1999 முதல் மே 2004 வரையில், அம்னோ பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 83 வயதான அவர், பின்னர் ஜூன் 2004 முதல் ஜூன் 2020 வரை மலாக்கா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

காடேக் தொகுதி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி குறித்து கேட்டதற்கு, வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டதாக முகமட் கலீல் கூறினார்.