அயேர் கெரோவில் வாக்களிக்கத் தடை – வாக்காளர் புகார்

மலாக்கா பிஆர்என் | அயேர் கெரோ சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதி கெர்க் சீ யீ, வாக்காளர் ஒருவரின் பெயர் வாக்களித்தவர் எனக் குறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் வாக்களிக்க இயலவில்லை என்ற அவரின் புகார் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவரது விரல்களில் இன்னும் நிரந்தர மை பூசப்படவில்லை என்றாலும் கூட, அவரால் வாக்களிக்க முடியவில்லை.

ஹாங் துவா ஜெயா நகர மன்றத்தின், புக்கிட் பெருவாங் மண்டபத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தபோது, ​​தனது பெயரைப் பயன்படுத்தி யாரோ வாக்களித்து விட்டதாக அந்தப் பெண் தன்னிடம் சொன்னதாக கெர்க் கூறினார்.

இந்த விஷயத்தை விரைவில் விசாரிக்குமாறு கெர்க் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

“அந்தப் பெண், தான் இன்னும் வாக்களிக்கவில்லை என்றும், விரலில் இன்னும் மை பூசப்படவில்லை என்றும், ஆனால், தன் பெயர் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் எங்களிடம் புகார் அளித்தார். அதனால், இம்முறை அவரால் வாக்களிக்க முடியவில்லை.

“இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு, அவர் காவல்துறையில் புகார் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று கெர்க் மலேசியாகினியிடம் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவிக்க, வாக்குச்சாவடி மையத்தின் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர் மறுத்துவிட்டார்.

கெர்க், யோங் ஃபன் ஜுவான் (மசீச) மற்றும் தேசியக் கூட்டணி வேட்பாளர் மைக்கேல் கான் பெங் லாம் (கெராக்கான்) ஆகியோரை அத்தொகுதியில் எதிர்கொள்கிறார்.

இதற்கிடையில், அயேர் மோலேக் மாநிலத் தொகுதியில், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிஎச், அதன் உறுப்புக் கட்சியின் பிரதிநிதியை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டதாகக் கூறினார்.

அயேர் மோலெக் மாநிலத் தொகுதி வேட்பாளர் முகமட் ரஃபீ இப்ராகிமைப் பிரதிநிதித்துவப்படுத்திய 66 வயதான முகமட் பசைன் யூசோப், இந்த விவகாரம் குறித்து கண்டாங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறினார்.

மலேசியாகினி பார்த்த ஓர் அறிக்கையில், இந்தச் சம்பவம் காலை 10.30 மணியளவில் நடந்ததாக தெரிகிறது.