முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளிதான் என மேல்முறையீட்டு நீதிமன்றம், இதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தின் அளித்த தீர்ப்பை முறையானது என்று உறுதி செய்தது.
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல்-க்கு சொந்தமான 42 மில்லியனை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான தண்டனையை மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று தீர்ப்புக்கு வந்தது.
நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜலீல், டத்தோ ஹாஸ் ஜனா மெஹாட் மற்றும் டத்தோ வசீர் ஆலம் மைடின் மீரா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு அப்துல் கரீம் தலைமை தாங்கினார். புத்ராஜெயா நீதி மன்றம் தீர்ப்பை வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்கியது.
நஜிப்பின் கணக்குகளில் பதிவான 42 மில்லியன் ரிங்கிட் SRC இன்டர்நேஷனலில் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது என்று அந்த மூத்த நீதிபதி கூறினார்.
“உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் உடன்படாததற்கு நாங்கள் எந்த நல்ல காரணத்தையும் காணவில்லை,” என்ற அப்துல் கரீம், தீர்ப்பு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்றார்.
இந்தத்தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் (Federal Court) மேல் முறையீடு செய்யப்போவதாக நஜிப்பின் வழக்கறிஞர் சாபி அப்துல்லா கூரினார்.
நஜிப்பின் மீதான் குற்றங்கள்
கடந்த 3 ஜூலை 2018 ல் இவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். எஸ். ஆர். சி. இன்டர்நேசனல் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து நஜிபின் சொந்த வங்கி கணக்கிற்கு ரி.ம. 42 மில்லியன் (USD 10.6 மில்லியன்) தொகை மாற்றப்பட்ட விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டார் அதன் மறுநாள் 4 சூலை 2018 ல் நஜிப் கோலாம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்தார். பிறகு ரி.ம. 1 மில்லியன் உத்திரவாத தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து 19 செப்டம்பர் 2018ல் நஜிப் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விசாரணையில் இருந்தபொழுது மீண்டும் கைது செய்யப்பட்டார். 1MDB நிறுவன விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அவர் 2013 ஆவது ஆண்டு பெற்ற ரி.ம. 2.6 பில்லியன் நன்கொடை சம்பந்தப்பட்ட வழக்கிற்காகவும் கைது செய்யப்பட்டார். மறுநாள் செப்டம்பர் 20, 2018, கோலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக 25 குற்றசாட்டுகள் தொடுக்கப்பட்டன. அவைகளை மறுத்து நஜிப் விசாரணை கோரினார். பின்னர் ரி.ம. 3.5 மில்லியன் உத்தரவாத தொகையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2020 ஜூலை 28 இல் மலேசிய உயர் நீதிமன்றம் ஏழு குற்றங்களில் இவரைக் குற்றவாளியாக அறிவித்தது. மொத்தம் 42 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது, 35 குற்றங்கள் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ம.ரி.210 மில்லியன் தண்டமும் அறிவிக்கப்பட்டது. ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு 10 ஆண்டுகள் (ஒரேநேர) சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
நஜிப் மலேசிய இந்தியர்களிடையே பிரபலமானவர். இவர் காலத்தில்தான் இந்தியர்களுக்காக அதிகமான நிதி ஒதுக்கப்ப்ட்டது என்பது குறிப்பிடதக்கது.