இராகவன் கருப்பையா– மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் உலகளாவிய நிலையில் எண்ணற்ற பயணங்களைத் தொடர்ந்தார்போல் மேற்கொண்டு வருகின்றனர்.
அவற்றுள் பெரும்பாலானவை இலக்கியம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. பிற நாட்டு இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களுடன் இலக்கியம் தொடர்பான விசயங்கள் மட்டுமின்றித் தமிழ் மொழி தொடர்பான பொதுவான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று வருகிறது.
இருந்த போதிலும் இத்தகைய நிகழ்வுகள் எதுவுமே பத்திரிகைகளைத் தவிர வேறு எவ்விதமான ஆவணங்களிலும் பதிவு செய்யப்படாதது ஒரு குறையாக இருந்து வந்துள்ளது.
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு ‘மந்திரக் கணங்கள்’ எனும் ஒரு தொகுப்பு நூல் வெளியீடு காணவிருக்கிறது.
கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அச்சங்கம் மேற்கொண்ட இலக்கியப் பயணங்களை மையமாக வைத்து இந்நூலைத் தயார் செய்துள்ளார் அதன் தலைவர் இராஜேந்திரன்
தமிழகத்திற்குப் பல தடவை மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கு அப்பாற்பட்டு அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மியன்மார் மற்றும் மோரிஷியஸ் போன்ற, தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சுமார் 30 பயணங்களின் அனுபவங்கள் இந்நூலில் அடக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற வண்ணப் புகைப் படங்களோடு 500கும் மேற்பட்ட பக்கங்களிலான இந்தப் பயணக் களஞ்சியத்தின் விலை 200 ரிங்கிட்டாகும்.
இந்நூல் எதிர்வரும் 12/12/21 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தலைநகர் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் வெளியீடு காணவிருக்கிறது.