லிம், உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்

அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ‘Kebiadapan Guan Eng’ என்னும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை மூலம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது அவதூறு கூறியுள்ளதாக பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்காக லிம்-முக்கு 200,000 ரிங்கிட் இழப்பீடும் 25,000 ரிங்கிட் செலவுத் தொகையும் கொடுக்குமாறு அந்த ஏட்டின் வெளியீட்டாளருக்கு அது ஆணையிட்டது.

“உண்மையான மலேசியர்களுக்கான மக்கள் அரசாங்கம்” என்னும் கருப் பொருளைக் கொண்ட தமது உரை குறித்து உத்துசான் வெளியிட்ட கட்டுரை அடிப்படையில் லிம் அந்த மலாய் மொழி நாளேடு மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த உரையை லிம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி கெப்பாளா பாத்தாஸில் நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட் மாநாட்டில் நிகழ்த்தினார்.

தமது தீர்ப்பை வாசித்த நீதித்துறை ஆணையர் ஜிவி வர்கிஸ், உத்துசான் “தீய நோக்கத்துடன் லிம்-மையும் டிஏபி-யையும் அவமானப்படுத்தி அவர்கள் மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிர்ப்பானவர்கள்” என்னும் தோற்றத்தைத் தரும் ஏழு பத்திகளை விவரித்தார்.

நிருபர்கள் தங்களது செய்திகளை உறுதிசெய்து கொள்வதின் மூலம் தொழில் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவதூறு வழக்குகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டும் எனக் கூறிய வர்கிஸ் “பொறுப்புள்ள இதழியல்” பற்றி சுருக்கமான பாடத்தையும் நடத்தினார்.

TAGS: