மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது.
இது சார்பாக மூத்த வழக்கறிஞரும், மலேசியகிணியின் கட்டுரையாளருமான கி. சீலதாஸ் ஊழல் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்கிறார்.
“இன்றைய நாட்டு நடப்பைக் கவனிக்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்கள் யாவும் முறியடிக்கப்பட்டதைத்தான் நாம் பார்க்கிறோம்.”
அதாவது அதிகாரத் துஷ்பிரயோகம் மிகையாகவே காணப்படுகின்றது. அரசு இந்த விஷயத்தில் எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டது என்று சிந்தித்துப் பார்த்தால் வெறும் விளம்பரங்களோடு அதன் கடமை தீர்ந்துவிட்டதாகவே அது நினைத்துச் செயல்பட்டது என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது என்று சாடுகிறார்.
என்ன செய்ய இயலும் என்ற வினாவுக்கு, “ஊழல் ஏற்றுக்கொள்ளத்தக்க கலாச்சாரம் அல்ல என்று இளம்வயதிலிருந்தே கற்பிக்க வேண்டிய கல்வியாகும். இந்த உண்மையை உணரும் வரையில் எப்படிப்பட்ட தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை விழலுக்கு இரைத்த நீராகவே இருக்கும்.” என்கிறார்.
வேலியே பயிரை மேயும் வேதனை!
சமீபத்தில் வெளியான ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரியின் செல்வக் குவிப்பு. அவரிடம் இருக்கும் செல்வம் அவருடைய சட்டப்படியான வருமானத்துக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமடையும்போது அவருக்கு ஆதரவாகச் சில அரசியல் கட்சிகள் நிற்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் சீலதாஸ்.
இன்று நாட்டின் அரசியல் நிலை, நாட்டைக் கேவலத்திற்கு உட்படுத்தும் ஊழல் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆழ்ந்து பார்க்கும் போது நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகளும் அவர்கள் செய்யும் முடிவுகள் யாவும் இந்த நாட்டின் இறுதி நாசத்துக்குக் காரணங்களாகத் திகழ்வதைக் காணலாம் என்று தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார் இந்த மூத்த சிந்தனைவாதி.
மலேசியாவை யார் காப்பாற்றுவார்? என்ற கேள்வி ஒவ்வொரு அக்கரை கொண்ட நாட்டு மக்களின் சிந்தனையிலும் எழ வேண்டும் என்கிறார் இவர்.