இராகவன் கருப்பையா- ஓர் ஊடகவியலாளர், படைப்பாளர், கவிஞரெனப் பன்முகம் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணியை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அக்கினி சுகுமார் அவர்களின் தமிழ்ப்பணியைப் பெருமை படுத்தும் வண்ணம் ‘இறையாய் இரு கனா’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு காணவுள்ளது.
சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் தமது 18ஆவது வயதில் ஊடகத் துறையில் கால் பதித்த அக்கினி சுகுமார், அசாத்தியத் திறமையால் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டின் முன்னணி கவிஞர்களில் ஒருவராகத் தம்மை வளர்த்துக் கொண்டார். அன்னாரின் இயற்பெயர் சுகுமார் வெள்ளதுரை. 3.10.2019-இல் காலமான போது இவருக்கு 64 வயது.
பிற்காலத்தில் அவரது படைப்புகள் புதுக் கவிதைகள் வழியும், கட்டுரைகள் வழியும் அவரை மூத்த எழுத்தாளர்களின் இடையே பிரகாசிக்க வைத்தன. அதோடு நவீன ஊடகச் சிந்தனையாளர் மற்றும் விளையாட்டுத்துறை விமர்சகர் போன்றவற்றிலும் ஆழமான கால் பதித்தவர்.
கனா மகுடங்கள் என்ற புதுக்கவிதை நூல், பட்டுப்புழுக்கள் என்ற குறுநாவல் இவரது படைப்புகளில் அடங்கும். தமிழீழ விடுதலை உணர்வில் உலகத்தமிழர்கள் உந்தப்பட்ட காலத்தில் மேதகு பிரபாகரனைச் சந்தித்து வந்தவர், அந்த உணர்வினை ‘மண்ணே உயிரே’ என்று உருவகம் கொடுத்தவர்.
வெளியீடு காணும் இந்நூலில் இடம் பெற்றுள்ள மொத்தம் 110 கவிதைகளைத் தவிர்த்து அன்றைய புதுக் கவிதையின் தோற்றம், அதன் மலர்ச்சி, வளர்ச்சி, எழுச்சியின் போது ஆங்காங்கே எழுந்த முனகல், முறுகல் தொடர்பான 44 ஆண்டுகாலக் கடிதங்களும் அச்சிடப்பட்டுள்ளது, படிப்பதற்குச் சுவாரசியமான ஓர் அனுபவமாக அமையும்.
அப்போதைய ஊடகத்துறை பங்களிப்பு, மூத்த எழுத்தாளர்களின் எதிர் மனநிலை மற்றும் இளையோரிடையே எழுந்த நேர்மறை சிந்தனைகள் தொடர்பான முன்னெடுப்பும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி எண்ணற்ற வண்ணப் புகைப்படங்களோடு மொத்தம் 246 பக்கங்களைக் கொண்ட இந்தக் கவிதைக் களஞ்சியத்தில் அக்கினி சுகுமார் தமது இறுதிக் காலத்தில் எழுதிய இசைப்பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய இதன் விலை 40 ரிங்கிட்டாகும்.
இந்நூல் வெளியீடு எதிர்வரும் 3.2.2022 வியாழக்கிழமை மாலை மணி 5க்கு கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள கிராண்ட் பசிஃபிக் ஹோட்டலில் மனிதவள அமைச்சர் சரவணன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அவருடன் பயணித்த சக ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.